பங்குச் சந்தை போர்ட்ஃபோலியோவை எப்படி வடிவமைப்பது? தமிழ் சினிமாவும், ஷேர் மார்க்கெட்டும்!

By Manikanda Prabu  |  First Published Sep 26, 2023, 1:42 PM IST

பங்குச் சந்தை போர்ட்ஃபோலியோவை எப்படி வடிவமைப்பது? சினிமாவுடன் தொடர்புப்படுத்தி அட்டகாசமான பதிவு


பங்குச்சந்தையில் பலரும் முதலீடு செய்து லாபம் ஈட்டி வருவர். குறிப்பாக, கொரோனா காலகட்டத்துக்கு பின்னர் பங்குச்சந்தையில் முதலீடு செய்வோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. புதிதாக பங்குச்சந்தையில் நுழைந்தவர்களுக்கு போர்ட்ஃபோலியோவை எப்படி நிர்வகிப்பது என்பதில் குழப்பம் இருக்கலாம். அதனை தீர்க்கும் வகையில், பங்குச் சந்தை போர்ட்ஃபோலியோவை எப்படி வடிவமைப்பது என்பதை சினிமாவுடன் தொடர்புப்படுத்தி மோகன் ஆர்கே என்பவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மோகன் ஆர்கே பதிவிட்டுள்ளதாவது: “நம்முடைய போர்ட்போலியோ-வில் லார்ஜ் கேப் - மிட் கேப் - ஸ்மால் கேப் இந்த மூன்று தரப்பட்ட ஸ்டாக்குகளுமே இருக்குமாறு பார்த்துக் கொள்வதுதான் நல்லது. மார்க்கெட்டில் புதிதாக வருபவர்கள் ஸ்மால் கேப் வாங்காமல் கொஞ்ச நாட்களுக்கு தவிர்ப்பது கூட நல்லதுதான். பத்து கம்பெனி ஷேர் வாங்கினால் 40-50-10 என்ற அளவில்  லார்ஜ் கேப் - மிட் கேப் - ஸ்மால் கேப் பங்குகள் என்று இருக்கலாம்.(50-40-10 என்றோ 30-60-10 என்று நம் வசதிக்கு வாங்கினாலும் ஒ.கே தான்.

Tap to resize

Latest Videos

சினிமா தியேட்டர் வைத்திருப்பவர்கள் ரஜினி, விஜய், அஜித் படங்களை(லார்ஜ் கேப்) 2 கோடி கொடுத்து வாங்குவார்கள். படம்  ஹிட்டானால் அதிகபட்சம் 3 கோடி கிடைக்கும்(50% லாபம்). ஆனாலும், இவர்கள் படத்தை வாங்குவதற்குதான் போட்டி போடுவார்கள். ஒரே காரணம், படம் நன்கு இல்லை என்றாலும் ரசிகர்கள் மூலம் போட்ட காசை எடுத்து விடலாம். பார்க்கிங், தின்பண்டங்கள் மூலமாகவும் நல்ல காசு பார்க்கலாம் (டிவிடெண்ட்).

அதே நேரத்தில் லவ் டுடே, காந்தாரா படங்களை(ஸ்மால் கேப்) 10 லட்சத்திற்கு வாங்குவார்கள். இலாபம் 1 கோடி கிடைக்கும்(10x). ஆனால், இந்த மாதிரி படங்கள் எப்பவாவது(4-5 வருடங்களுக்கு) ஒரு முறைதான் அமையும். எல்லா சின்ன படங்களையும் லவ் டுடே, காந்தாரா போல் வரும் என்று வாங்கினால் நம் காசு 'அம்போ' தான். ஸ்மால் கேப் பங்குகள் கூட இப்படித்தான்.

தனுஷ், கார்த்தி, சிவகார்த்திகேயன்(மிட் கேப்) படங்கள் 50 லட்சம் கொடுத்து வாங்கி, படம் ஆவரேஜ் என்றால் 75 லட்சம் கிடைக்கும். சூப்பர் ஹிட்டாகிவிட்டால் 1 கோடிக்கு மேல் கூட கிடைக்க வாய்ப்பிருக்கிறது(50 or 100%). படம் ஓடவில்லையென்றாலும் பெரிய அளவில் நட்டமாகாது.

மிட் கேப்பில் இருக்கும் எந்தப் பங்கு நாளை லார்ஜ் கேப் லிஸ்டிற்குள் வரும் என்று ஓரளவிற்கு கணித்து விடலாம். தனுஷ், கார்த்தி, சிவகார்த்திகேயன் போன்றவர்களில் ஒருவர் நாளை ரஜினி, விஜய், அஜித் இடத்திற்கு வர முடியும் என்று கணிக்கலாம். ஆனால் ஹரிஷ்  கல்யாண், பிரதீப் ரங்கநாதன் போன்றோர் நாளை சூப்பர் ஸ்டாராவர்கள் என்று எப்படி கணிக்க முடியும். பேக் டு பேக் ஹிட் கொடுத்து சூப்பர் ஸ்டார் ரேன்ஜில் இருந்த மோகன், ராமராஜன், ராஜ்கிரனெல்லாம் நிலைத்து நிற்க முடியவில்லை.  நாம் வாங்கும் சில பங்குகளும் திடீரென அதல பாதாளத்தில் விழுகும். ஓரளவிற்கு நட்டத்துடன் வெளியில் வருவதுதான் நாம் செய்யக் கூடிய ஒரே விஷயம். அதனால்தான் ஸ்மால் கேப் பங்க்குகளில் ரிஸ்க் எடுக்கக் கூடாது என்பது.

வருமான வரியைச் சேமிக்க அருமையான 5 வழிகள் - முழு விபரம் இதோ !!

1990 களில்  ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக், பிரபு  தான் முன்னணி ஹீரோக்கள். 2000-த்தில் ரஜினி, கமல்  தவிர சில வருடங்கள் விஜயகாந்த், சத்யராஜ் தாக்குப் பிடித்தார்கள். இப்போது 2020-ல் ரஜினி, கமல் இன்னும் களத்தில் இருக்கிறார்கள். ஆனால், இந்த லிஸ்ட்டிலேயே இல்லாமல் 1990 களிலிருந்து இப்போது வரை இன்னும் களத்தில் இருக்கின்ற அர்ஜுனை நாம் கண்டு கொள்ள மாட்டோம். இப்படிதான்  லார்ஜ் கேப் - மிட் கேப் - ஸ்மால் கேப் தவிர்த்து சில பங்குகள் இருக்கும். வருடா வருடம் டீசன்ட்டான ரிடர்ன் நீண்ட காலத்திற்கு கொடுத்துக் கொண்டிருக்கும். அப்படிப்பட்ட பங்குகளை நாம் ஏறெடுத்துக் கூட பார்ப்பதில்லை.

எப்படி படத்திற்கான டிமாண்ட் ஹீரோ, அவரின் முந்தைய படங்களின் வெற்றி, படத்தின் இயக்குனர், ஹிரோயின், இசையமைப்பாளர் என்று பல காரணிகளால் முடிவு செய்யப்படுதோ அப்படி நாம் வாங்கும் பங்கையும் (Sales - Net Profit - Business - Balance Sheet) என்று பலவற்றையும் ஆராய்ந்து வாங்க வேண்டும். பங்கு சந்தையில் வெற்றி என்பது எந்தப் பங்கை வாங்குகிறோம் என்பதை விட எந்தப் பங்கை வாங்காமல் தவிர்க்கிறோம் என்பதில்தான் இருக்கிறது.” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

click me!