பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கப்படுவதுடன் ரூ.5 கோடி வரை கடன் வழங்கப்படுகிறது.
நாட்டில் சுய தொழில் தொடங்க வேண்டும் என்று ஆர்வமுள்ள இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில் சுய தொழில் தொடங்க குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுவதுடன், மானியமும் வழங்கப்படுகிறது.
அந்த வகையில் பிரதமரின் ரோஜ்கர் யோஜனா மற்றும் கிராமப்புற வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் ஆகியவை செயல்பட்டு வந்தன. இந்த இரண்டு திட்டங்களையும் இணைத்து பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் PMEGP என்ற புதிய கடன் இணைக்கப்பட்ட மானிய திட்டத்தை சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்தது. கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பை உருவாக்குவது, சுய தொழில் தொடங்குவதை ஊக்குவிக்க வேண்டும் ஆகியவை இதன் நோக்கமாகும்.
பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கப்படும். பின்னர் அவர்களின் வணிக திட்டங்களை தயாரிக்க உதவுவதுடன் சேவை முயற்சிகளை அமைக்க நிதி நிறுவனங்களுடன் இணைவதற்கு உதவி செய்யப்படும்.
இந்த திட்டத்தின் பயனாளிகள் முதல் தலைமுறை தொழில் முனைவரோக இருக்க வேண்டியது அவசியம். இந்த திட்டத்தில் ரூ.5 கோடி வரை கடன் உதவி கிடைக்கும். இந்த திட்டத்தில் படித்த இளைஞர்கள் தொழில் முனைவோராக விரும்பினால் அதிகபட்ச மானியமாக ரூ.50 லட்சம் பெறலாம். இந்த தொகையை ரூ.75 லட்சமாக தமிழக அரசு உயர்த்தியது. ஆதி திராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளி தொழில் முனைவோரை ஊக்குவிக்க 10 சதவீதம் முதலீட்டு மானியம் வழங்கப்படும்.
இந்த நிலையில் இந்த திட்டம் தொடர்பான முக்கிய அறிவிப்பை தேனி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.அதன்படி புதிய தொழில் தொடங்க ரூ.75 லட்சம் வரை கடன் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் சார்பில் 21 முதல் 25 வயது வரையிலான பொதுப்பிரிவை சேர்ந்தவர்களும், எஸ்.சி, எஸ்டி, பிசி, எம்பிசி உள்ளிட்ட பிரிவினர் 21 முதல் 45 வயது வரை உள்ளவர்கள் கடனுதவி கோரி விண்ணப்பிக்கலாம்.
இந்த திட்டத்தின் மூலம் விண்ணப்பிக்க விரும்புவோர் முதல் தலைமுறை தொழில் முனைவோராக இருக்க வேண்டும். பட்டம், பட்டயம், ஐடிஐ படித்தவராக இருக்க வேண்டும். ஆனால் கல்வித்தகுதியை அரசு குறைத்துள்ளதால் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். சக்கரம் அலைன்மெண்ட், கான்கிரீட் கலவை இயந்திரம், அரிசி ஆலை, ஆயத்த ஆடை தயாரிப்பு போன்ற தொழில்களை தொடங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.