Bitcoin-னில் முதலீடு செய்திருக்கிறீர்களா.? இந்தியாவில் அங்கீகரிக்கப்படுமா.? நிர்மலா சீதாராமன் முக்கிய தகவல்!

By Asianet TamilFirst Published Nov 29, 2021, 9:01 PM IST
Highlights

குறுகிய காலத்தில் பணம் ஈட்ட ஆசைப்படுவோரும் பிட்காயினில் முதலீடு செய்ய ஆர்வம் அதிகரித்துள்ளது. ஆனால், பிட்காயின், எத்தீரியம், லைட்காயின் டீத்தர், சொலானா எனப் பல பெயர்களில் கிரிப்டோகரன்சிகளில்தான் அதிகளவில் பரிவர்த்தனைகள் நடக்கின்றன.

பிட்காயின் ஒரு கரன்சியாக அங்கீகரிக்கப்படுமா என்பது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சாதாரணமாக ஒரு சில நாடுகளில் தொடங்கிய கிரிப்டோகரன்சி இன்று உலகில் பல நாடுகளிலும் கிளை பரப்பியுள்ளது. தற்போதைய சூழலில் சர்வதேச அளவில் கிரிப்டோ கரன்சியான பிட்காயின் பயன்பாடு அதிகரித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த பிட்காயின் முதலீடும் தற்போது இந்தியாவிலும் அதிகரித்துள்ளது. ஒரு காலத்தில் எம்.எல்.எம். பிசினஸுக்கு ஆட்களைப் பிடித்ததைப் போல பிட்காயினில் முதலீடு செய்ய ஆட்களைப் பிடிக்கும் கூட்டமும் அதிகரித்துள்ளது.

அதன் வெளிப்பாடாக இந்தியாவிலும் கிரிப்டோகரன்சி மீதான முதலீடுகள் அதிகரித்துள்ளன. குறுகிய காலத்தில் பணம் ஈட்ட ஆசைப்படுவோரும் பிட்காயினில் முதலீடு செய்ய ஆர்வம் அதிகரித்துள்ளது. ஆனால், பிட்காயின், எத்தீரியம், லைட்காயின் டீத்தர், சொலானா எனப் பல பெயர்களில் கிரிப்டோகரன்சிகளில்தான் அதிகளவில் பரிவர்த்தனைகள் நடக்கின்றன. தொடர்ந்து கிரிப்டோ கரன்சியில் பலரும் முதலீடுகள் செய்வதால் அது பொருளாதார ரீதியிலும் பெரும் சவாலை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், கிரிப்டோ கரன்சிகளை ஒழுங்குப்படுத்தும் மசோதா நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் அறிமுகபடுத்தப்பட உள்ளது. இந்த மசோதாவின் மூலம் சில தனியார் கிரிப்டோ கரன்சிகளுக்கு இந்தியாவில் தடை செய்யப்படலாம். இன்னும் கடுமையாக முறைப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில், கிரிப்டோ கரன்சிகளுக்கு அங்கீகாரம் அளித்து ரிசர்வ் வங்கி மூலம் அதிகாரபூர்வ டிஜிட்டல் கரன்சி கொண்டுவரவும் திட்டமிட்டுள்ளதாக மாறுப்பட்ட தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதற்கிடையே நாடாளுமன்றத்தில் கிரிப்டோ கரன்சி குறித்த கேள்விக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்துள்ளார். ''பிட்காயினை ஒரு கரன்சியாக அங்கீகரிக்க மத்திய அரசிடம் திட்டம் எதுவும் கிடையாது. பிட்காயின் தொடர்பாக எந்தவிதமான புள்ளிவிவரத்தையும் மத்திய அரசு சேகரிக்கவில்லை” என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

click me!