புதிய உச்சம் தொட்ட ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வருவாய் ! 1.87 லட்சம் கோடி வசூல்!

By SG BalanFirst Published May 2, 2023, 12:52 PM IST
Highlights

ஏப்ரல் 2023 இல் ஜிஎஸ்டி வசூல் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்து ரூ.1,87,035 கோடியாக உயர்ந்துள்ளது. முதல் முறையாக 1.75 லட்சம் கோடியைக் கடந்திருக்கிறது.

ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் ஏப்ரல் 2023 இல் இதுவரை இல்லாத உச்சத்தைத் தொட்டிருக்கிறது. ஏப்ரல் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1,87,035 கோடியாக உயர்ந்துள்ளது. இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ. 38,440 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.47,412 கோடி, கூட்டு ஜிஎஸ்டி ரூ.89,158 கோடி எனக் கூறப்பட்டுள்ளது. செஸ் வரி ரூ.12,025 கோடியாக இருந்ததாவும் அதில் பொருட்களின் இறக்குமதி மூலம் வசூலானது ரூ.901 கோடி எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

"ஏப்ரல் 2023 இல் மொத்த ஜிஎஸ்டி வசூல் இதுவரை இல்லாத அளவு உயர்ந்து, 2022 ஏப்ரலில் வசூலான ரூ.1,67,540 லட்சம் கோடியை விட ரூ.19,495 கோடி அதிகரித்துள்ளது" என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 2023க்கான ஜிஎஸ்டி வருவாய் முந்தைய ஆண்டின் ஏப்ரல் மாதம் ஜிஎஸ்டி வருவாயை விட 12% அதிகமாகும்.

முதல் முறையாக மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.1.75 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. மார்ச் 2023 இல் உருவாக்கப்பட்ட மொத்த இ-வே பில்களின் எண்ணிக்கை 9 கோடி ஆகும். இது பிப்ரவரி 2023 இல் உருவாக்கப்பட்ட 8.1 கோடி இ-வே பில்களை விட 11% அதிகம்.

ஏப்ரல் 20 அன்று அதிகபட்ச ஒருநாள் வரி வசூலும் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்வு கண்டது. அன்றைய ஒரு நாளில் 9.8 லட்சம் பரிவர்த்தனைகள் மூலம் ரூ.68,228 கோடி செலுத்தப்பட்டது. கடந்த ஆண்டு இதே தேதியில் 9.6 லட்சம் பரிவர்த்தனைகள் மூலம் ரூ.57,846 கோடி செலுத்தப்பட்டது.

உள்நாட்டு பரிவர்த்தனைகளின் வருவாயும் (சேவைகளின் இறக்குமதி உட்பட) கடந்த ஆண்டு இதே மாதத்தில் ஈட்டிய வருவாயை விட 16% அதிகமாகும்.

ஜிஎஸ்டி வசூல் சாதனை குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி இது ஜிஎஸ்டி சிறப்பாக செயல்படுத்தப்பட்டு இருப்பதற்கு சாட்சியாக உள்ளது என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.

click me!