
47th meeting of GST Council to be held on June 28-29 in Srinagar: 47-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை எங்கு நடத்துவது, எப்போது நடத்துவது குறித்து மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
ஒத்திவைப்பு
ஜிஎஸ்டி கவுன்சில் குழுவின் தலைவரும், மத்திய நிதிஅமைச்சருமான நிர்மலா சீதாராமன் கடந்த மாதத்தில் அமெரிக்காவுக்கு சென்றிருந்ததால், கடந்த மாதம் நடக்க இருந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து, ஜிஎஸ்டி வரி முறையில் பல சீர்திருத்தங்கள், வரிப்படிநிலையில் மாற்றங்கள், புதிய வரிவிதிப்புகள் உள்ளிட்டவை கொண்டுவரப்பட இருப்பதாக பேசப்பட்டது.
47-வது கூட்டம்
இதனால் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் குறித்து மத்திய நிதிஅமைச்சகம் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “47-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் ஜூன் 28, 29 ஆகிய(செவ்வாய்,புதன்) இரு தேதிகளில் நடக்கும்” எனத் தெரிவித்துள்ளது.
ஸ்ரீநகரில் 2-வது முறையாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடக்கிறது. இதற்கு முன் 14-வது கூட்டமும் ஸ்ரீநகரில் நடந்தது. அப்போது 1,211 பொருட்களுக்கு வரிவிதிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
முக்கியத்துவம் என்ன
47-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. மாநில நிதிஅமைச்சர்கள் கொண்ட குழு, வரிவிதிப்பை ஒழுங்குபடுத்துதல், சூதாட்டகிளப்புகள், குதிரைப்பந்தயம், ஆன்லைன் விளையாட்டு ஆகியவற்றுக்கு வரிவிதிப்பை அதிகப்படுத்துவது குறித்து பரிந்துரைகளை அளித்துள்ளது. சூதாட்ட கிளப், குதிரைப்பந்தயம், லாட்டரி ஆகியவற்றுக்கு விதிக்கப்படுவதுபோல் 28 சதவீதம் ஜிஎஸ்டி வரிவிதிக்க மாநில நிதிஅமைச்சர்கள் கொண்ட குழு ஆதரவு தெரிவித்துள்ளது.
இன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் ஜிஎஸ்டி வரியை எளிமைப்படுத்துதல், வரிபடிநிலையை சீரமைத்தல் குறித்து அமைச்சர்கள் குழு ஆலோசிக்கும். இன்னும் அந்தப் பணிகள் முழுமையாக முடியாததால், கூடுதல் அவகாசம் கேட்கலாம் எனத் தெரிகிறது.
இழப்பீடு நீட்டிப்பு
ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியமாக ஆலோசிக்கப்படுவது, மாநிலங்களுக்கு இழப்பீட்டை நீட்டிப்பதாகும். ஜிஎஸ்டி வரி அறிமுகப்படுத்தப்பட்டபோது 5 ஆண்டுகளுக்கு மாநிலங்களுக்கு வரிஇழப்பீடு தொகை வழங்கப்படும் எனக் கூறப்பட்டது, அந்தவகையில் ஜூன் மாதத்தோடு அந்தக் காலம் முடிகிறது. அதன்பின் இழப்பீட்டை மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கத் தேவையில்லை.
ஆனால், இந்த இழப்பீட்டை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு மாநில அரசுகள் வலியுறுத்திவருகின்றன. குறி்ப்பாக பாஜக ஆளாத மாநில அரசுகள் இழப்பீடு வழங்குவதை நீட்டிக்க வேண்டும் என்று கோரியுள்ளன. இது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்படும்.
வருவாய் பாதிப்பு
ஒருவேளை இழப்பீடு வழங்க ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புத் அளித்தாலும், அதற்கு நாடாளுமன்றத்தில் அரசியலமைப்புச் சட்டத்தில் 101வது சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும். அது மழைக்காலக் கூட்டத்தொடரில்தான் திருத்தம் கொண்டுவந்து நிறைவேற்ற முடியும். 28 சதவீதவரி நிலையில் இருக்கும் பான் மசாலா, புகையிலை, சொகுசுகார்கள், குளிர்பானங்கள் உள்ளிட்டஆடம்பர பொருட்களுக்கான வரிவிதிப்பில் மட்டுமே மாநிலங்களுக்கு பகிர்வு கிடைக்கும்.
விரிவிதிப்பு மறு ஆய்வு
2-வதாக ஜிஎஸ்டி வரிஅமைப்பு முறையை எளிமைப்படுத்துவது தொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும். இதன்படி வரிவிதிப்பை மறுஆய்வு செய்தலும், வரிவிலக்கில் இருக்கும் பொருட்களையும் மறுஆய்வு செய்தலும் நடக்கும். அதாவது தற்போது வரிவிலக்கில் இருக்கும் பல பொருட்கள் வரிவிதிப்புக்குள் கொண்டுவரப்படலாம். சிலவரிகள் நீக்கப்பட்டு, புதிய வரி உருவாக்கப்படலாம், அல்லது குறைக்கப்படலாம்.
அதாவது 12 சதவீதம் மற்றும் 18 சதவீத வரிகள் நீக்கப்பட்டு ஒரேஒரு வரி மட்டும் கொண்டுவரப்படலாம். 5 சதவீத வரி நீக்கப்பட்டு, 8 சதவீதமாக உயர்த்தப்படலாம். தற்போது ஜிஎஸ்டி வரிவிதிப்பு 5, 12, 18 28 ஆகிய வீதத்தில் இருக்கிறது. இந்த படிநிலைகளில் மாற்றம் கொண்டுவரப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.