
47-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இந்த மாதத்தில் நடக்க வாய்ப்பில்லை, அடுத்த மாதத்தில் நடக்கலாம் என்று மத்திய நிதிஅமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன், உலக வங்கி மற்றும் சர்வதேச நிதியத்தின் கூட்டத்தில் பங்கேற்கபதற்கா அமெரி்க்காவுக்கு 10 நாட்கள் செல்வதால் கூட்டம் இம்மாதத்தில் நடக்க வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.
அமெரிக்கா பயணம்
முன்னதாக நிதிஅமைச்சருக்கு பல்வேறு பணிகள்இருப்பதால், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஏப்ரல் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், அமெரிக்கப் பயணம் முக்கியம் என்பதால், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்பது நிதிஅமைச்சரால் சாத்தியமில்லை என்பதால், அடுத்த மாதம் நடத்தப்படலாம் எனத் தெரிகிறது.
ஆனால், 47-வது ஜிஎஸ்டி கூட்டத்தை மேகாலயாவில் உள்ள ஷில்லாங்கில் நடத்த முன்பு முடிவு செய்யப்பட்டதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு தரும் முறை வரும்ஜூன் மாதத்தோடு முடிகிறது. இந்த இழப்பீடு தரும் முறையை நீட்டிக்க வேண்டும் எனக் கோரி பாஜக ஆளாத மாநிலங்களில் உள்ள அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்த விவகாரம் குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பேசப்படலாம்.
இழப்பீடு நீட்டிப்பு
இது குறித்து நிதிஅமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில் “ அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மாநிலங்களுக்கு இழப்பீடு தரும் முறை குறித்து ஆலோசிக்கப்படலாம். 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு நீட்டிப்பது குறித்து கருத்தொற்றுமை நீடித்தால், அதற்குநாடாளுமன்ற ஒப்புதல் தேவை. அதுகுறித்து அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் ஒப்புதல் பெற வேண்டும்.
ஜிஎஸ்டி வரி வருவாயைப் பெருக்க கடந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அதாவது குறைந்தபட்ச வரியை உயர்த்துவது, சிலவரிகளை நீக்குவது என ஆலோசிக்கப்பட்டது. அதன்படி, 5% மற்றும்12% வரிகள் குறித்தும் ஆலோசிக்கப்படும்.
வரிவீதத்தில் மாற்றம்
இந்த இரு சதவீதத்திலும் விழும் வரிகள் நீக்கப்பட்டு பொதுவாக 8 சதவீதம்வரி என அறிமுகப்படுத்தப்படலாம். ஏராளமான பொருட்கள் 12% வரிவிதிப்புக்குள் வருகின்றன. அவற்றை 18 சதவீதத்துக்குள் மாற்றவும் ஆலோசி்க்கப்படலாம்.
ஆனால், நாட்டில் பணவீக்கம், விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சர்வதேச சூழல் ஆகியவற்றைப் பார்த்துதான் இந்த விஷயங்களில் முடிவுஎடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.