GST Council : ஜிஎஸ்டி குறைந்தபட்ச வரி 5 சதவீதத்திலிருந்து 8% அதிகரிப்பா? மத்திய அரசு புதிய விளக்கம்

By Pothy RajFirst Published Apr 19, 2022, 11:45 AM IST
Highlights

gst council  :  சரக்கு மற்றும் சேவை வரியில் குறைந்தபட்சமாக தற்போது இருக்கும் 5 சதவீத வரியை 8 சதவீதமாக உயர்த்த இருப்பதாக எழுந்துள்ள தகவல்கள் குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரியில் குறைந்தபட்சமாக தற்போது இருக்கும் 5 சதவீத வரியை 8 சதவீதமாக உயர்த்த இருப்பதாக எழுந்துள்ள தகவல்கள் குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

ஜிஎஸ்டி வரி

தற்போது ஜிஎஸ்டி வரிவிதிப்பில் 4 படிநிலைகள் உள்ளன. 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீத வரிகள் விதிக்கப்படுகின்றன. இதில் தங்கம் , மற்றும் தங்க நகைகளுக்கு 3 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது.

 தற்போது குறைந்தபட்ச வரியாக இருக்கும் 5 சதவீதத்தை 8% உயர்த்தவும், 18 சதவீதவரியையும், 12 சதவீத வரியையும் நீக்கிவிட்டு 15 சதவீதமாகவும் கொண்டுவர ஆலோசனைகள் பரி்ந்துரைக்கப்பட்டுள்ளன என்று தகவல்கள் வெளியாகின. வரும் மே மாதம் நடக்கும் ஜிஎஸ்டி கவுன்சிலில் 5 சதவீதம் வரி 8 சதவீதமாக உயர்த்தப்படலாம் எனத் தகவல்கள் வெளிவந்தன.

அறிக்கை தயாராகவில்லை

இந்நிலையில் மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில் “ கடந்த ஆண்டு ஜிஎஸ்டி அமைச்சர்கள் குழுவை அமைத்தது. அதில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, மே.வங்க நிதியமைச்சர் அமித் மித்ரா, கேரள நிதியமைச்சர் கே.என் பாலகோபால், பிஹார் துணை முதல்வர் தார்கிஷோர் பிரசாத் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

உண்மையில்லை

இந்த குழுவினர் இன்னும் ஜிஎஸ்டி வரி வீதத்தை மாற்றி அமைக்கும் அறிக்கையை தயாரிக்கவும் இல்லை, அதை ஜிஎஸ்டி கவுன்சிலிடம் தாக்கல் செய்யவும் இல்லை.  ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் எப்போது நடத்தப்படும் என்பதற்கான தேதியும் இதுவரை முடிவு செய்யப்படவில்லை. 
மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தற்போது அமெரிக்காவில் இருப்பதால்,அவர் வந்தபின்புதான் கவுன்சில் கூட்டம்குறித்த தேதி முடிவாகும். ஆதலால், 5 சதவீதத்தை 8 % வரி உயர்த்தப்போகிறார்கள் என்ற செய்தி நம்பகத்தன்மை இல்லாதது” எனத் தெரிவித்தனர்.

வருவாய் பெருக்கம்

கடந்த 2017ம் ஆண்டுஜூலை மாதம் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, ஜிஎஸ்டி வரிவருவாய்க்கு மாறியதால், மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் எந்தவிதமான வரிவருவாய் இழப்பும் இல்லை. இந்த வருவாய்-சமநிலை வீதம் 15.5 சதவீதமாக இருக்கிறது. வரிவிலக்குகள், வரிக்குறைப்பு ஆகியவற்றால் வரிவீதம் 11.6% மாகக் குறைந்துள்ளது.

ஜிஎஸ்டி வரியில் தற்போதிருக்கும் 5 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக அதிகரிக்கும்பட்சத்தில் மத்திய அரசுக்கு கூடுதலாக ரூ.1.50 லட்சம்கோடி கிடைக்கும். தற்போது சில்லரை பணவீக்கம் 6.95%, மொத்தவிலைப் பணவீக்கம் 14 சதவீதத்துக்கும் மேல் கடுமையாக இருக்கும் நிலையில் இந்த நேரத்தில் ஜிஎஸ்டி வரியை உயர்த்துவதும் சரியான முடிவாக இருக்காது என்றும் கூறப்படுகிறது.

click me!