gst: எந்த பாக்கியும் இல்லீங்க! ஒட்டுமொத்த ஜிஎஸ்டி நிலுவைகளையும் மாநிலங்களுக்கு வழங்கியது மத்திய அரசு

By Pothy RajFirst Published Jun 1, 2022, 10:37 AM IST
Highlights

gst compensation : மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகைஅனைத்தும் இன்றையதேதி வரை வழங்கப்பட்டுள்ளது. ரூ.86ஆயிரத்து 912 கோடி மாநில அரசுளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதிஅமைச்சகம் தெரிவித்துள்ளது.

மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகைஅனைத்தும் இன்றையதேதி வரை வழங்கப்பட்டுள்ளது. ரூ.86ஆயிரத்து 912 கோடி மாநில அரசுளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதிஅமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதில் ரூ.25ஆயிரம் கோடி ஜிஎஸ்டி இழப்பீடு தொகைக்கும், மீதமுள்ள ரூ.61ஆயிரத்து 912 கோடி மத்திய செஸ் வரி வசூலித்ததில் இருந்து நிலுவைத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஏப்ரல் மற்றும் மே மாதம் ஜிஎஸ்டி நிலுவைத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல், மே மாதத்துக்கு ரூ.17,973 கோடியும், பிப்ரவரி மார்ச் மாத நிலுவையாக ரூ.21,322 கோடியும், ரூ.47,617 கோடி ஜனவரி வரையிலும் விடுவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து மத்திய நிதிஅமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பி்ல் “ 2022, மார்ச் 31ம் தேதிவரை மாநிலங்களுக்கு தர வேண்டிய ஒட்டுமொத்த ஜிஎஸ்டி நிலுவைத் தொகையான ரூ.86,912 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இந்த நிதியாண்டில் மாநிலங்கள் தங்கள் பணிகளையும், செலவுகளையும் சிறப்பாகச்செய்யவும் மேலாண்மைசெய்யவும் உதவியாக இந்தத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது” எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் ஜிஎஸ்டி வரிமுறை நாட்டில் அமலுக்கு வந்தது. ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்தும் போது ஏற்படும் இழப்புகளுக்கு தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு தொகையை மாநிலங்களுக்கு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இதற்காக சில பொருட்கள் மீது செஸ் வரி விதிக்கப்பட்டு அதிலிருந்து கிடைக்கும் தொகை இழப்பீடு தொகைக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம் சென்னை வந்திருந்த பிரதமர் மோடியுடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக முதல்வர் முக ஸ்டாலின், ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை தமிழகத்துக்கு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

அதுமட்டுமல்லாமல் ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கும் காலத்தையும் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீடிக்கவும் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். இதன்படி தமிழகத்துக்கு நிலுவையாக இருந்த ஜிஎஸ்டி தொகை ரூ.9602 கோடியையும் மத்திய அரசு விடுவித்துள்ளது.


 

click me!