
2050ம் ஆண்டுக்குள் இந்தியாவின் பொருளாதாரம் 30 லட்சம் கோடி டாலர் மதிப்பு கொண்ட பொருளாதாரமாக மாறினால், இந்தியாவில் ஒருவர் கூட இரவில் பட்டினியுடன் உறங்கச் செல்லமாட்டார்கள் என்று தொழிலதிபர் கவுதம் அதானி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் 2-வது இடத்திலும், உலகளவில் முதல் 10 கோடீஸ்வரர்களில் ஒருவராக இருப்பவர் கவுதம் அதானி. விமானநிலையம், துறைமுகம், மின்சக்தி உற்பத்தி மற்றும பகிர்மானம் ஆகியவற்றில் ஏராளமான நிறுவனங்களை அதானி நடத்தி வருகிறார். உலகின் மிகப்பெரிய பணக்காரர்களான எலான் மஸ்க், அமேசான் உரிமையாளர் ஜெப் பிஜோஸின் சொத்துக்களையும் அதானி மிஞ்சிவிட்டார். அதானியின் சொத்துமதிப்பு மட்டும் 4900 கோடி டாலராகும்
இந்நிலையில் டைம்ஸ் நெட்வொர்க் சார்பில் நடத்தப்பட்ட ஒரு கருத்தரங்கில் தொழிலதிபர் கவுதம் அதானி நேற்று பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
25 லட்சம் கோடி டாலர்கள்
2050ம்ஆண்டை நாம் நெருங்குவதற்கு இன்னும் 10ஆயிரம் நாட்கள் உள்ளன. இந்த காலக் கட்டத்துக்குள், நாம் நம்முடை பொருளதாரத்தில் கூடுதலாக 25 லட்சம் கோடி டாலர்களைச் சேர்க்க முடியும் என்று எதிர்பார்க்கிறேன். அதாவது, ஒவ்வொரு நாளும் 250 கோடி டாலர் ஜிடிபியில் சேர வேண்டும். இந்த காலகட்டத்துக்குள் இது நடந்தால், நிச்சயம் நாட்டில் வறுமை ஒழியும் என எதிர்பார்க்கிறேன்
பொருளாதார வளர்ச்சி குறித்த எண்களும், சிந்தனையும் வியப்பளித்தாலும், 10 ஆயிரம் நாட்களுக்குள் தேசத்தின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்து இதை நனவாக்க முடியும் என நம்புகிறேன். திட்டமிட்டபடி பொருளாதாரம் வளர்ந்தால், 10 ஆயிரம் நாட்களில் பங்குச்சந்தை மதிப்பு 40 லட்சம் கோடி டாலர் மதிப்பு கொண்ட சந்தையாக மாறும். இதற்கு தினசரி 400 கோடி டாலர் சேர்க்க வேண்டும்.
மாரத்தான் வேகம்
140 கோடி மக்களின் வாழ்க்கைத் தரத்தையும், வாழ்க்கையும் உயர்த்துவது குறுகிய காலத்தில் மாரத்தான் ஓட்டம்போல் உணரலாம். ஆனால், நீண்ட கால ஓட்டத்துக்கு இது உத்வேகம். 2050ம் ஆண்டுக்குள் இந்தியாவின் பொருளாதாரம் 30 லட்சம் கோடி டாலர் மதிப்பு கொண்ட பொருளாதாரமாக மாறினால், இந்தியாவில் ஒருவர் கூட இரவில் பட்டினியுடன் உறங்கச் செல்லமாட்டார்கள்” எனத் தெரிவித்தார்
வறுமை குறித்து உலக வங்கியின் சமீபத்திய அறிக்கையில், இந்தியா 2011 முதல் 2019ம் ஆண்டுக்கு இடையே வறுமையில்12.3 புள்ளிகள் குறைந்துள்ளது எனத் தெரிவித்துள்ளது
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.