tesla elon musk : ட்வி்ட்டர் நிறுவனத்தை வாங்குவதற்காக டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்குடன் ஹெச்எஸ்ஆர் சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட ஒப்பந்தம், வழங்கப்பட்ட காலக்கெடு முடிந்துவிட்டது என்று ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதனால் 44,00 கோடி டாலருக்கு ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் எலான் மஸ்கின் ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்று 12க்கும் மேற்பட்ட ட்விட்டருக்கு ஆதரவான குழுக்கள் களமிறங்கியுள்ளன.
ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் எலான் மஸ்கின் ஒப்பந்தம் ஏறக்குறைய முடிந்துவிட்டது. ட்விட்டர் பங்குதாரர்களின் ஒப்பந்தமும்,பங்குச்சந்தை ஒப்புதலும் கிடைத்தால் ஒப்பந்தம் முறைப்படி ரத்தாகும் என்று ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தில் 9 சதவீதத்துக்கும் அதிகமான பங்குகளை விலைக்கு வாங்கினார். இதன் மூலம் அதிகமாக பங்குகளை வைத்திருக்கும் தனிநபர் என்ற பெருமையைப் பெற்றார். ஆனால், ட்விட்டர் நிர்வாகக் குழுவில் அழைப்பு விடுக்கப்பட்டபோது, அதில் இணைவதற்கு எலான் மஸ்க் மறுத்துவிட்டார்
அடுத்த சில நாட்களில் ட்விட்டர் சமூக வலைதளத்தை 4400 கோடி டாலருக்கு நானே வாங்கிக்கொள்கிறேன் என்று எலான் மஸ்க் அறிவித்தார். ட்விட்டர் நிறுவனத்தில் உள்ள ஒவ்வொரு பங்கையும் 54.20 டாலருக்கு வாங்க விரும்புவதாகவும் எலான் மஸ்க் பங்குச்சந்தையில் பைலிங்கில் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக ட்விட்டர் நிறுவனத்துக்கும், எலான் மஸ்கிற்கும் ஒப்பந்தம் கையொப்பமானது. ஆனால், திடீரென ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் தனது முடிவை ஒத்திவைப்பதாக எலான் மஸ்க் தெரிவித்தார்.
ட்விட்டர் நிறுவனத்தில் ஏராளமான போலிக் கணக்குகள் இருப்பதால், அதுதொடர்பாக தகவல்கள் தேவை என்று எலான் மஸ்க் கோரியிருந்தார்.எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதாக கூறியபோது 12 சதவீதம் அதிகரித்த பங்குகள், தனது முடிவை ஒத்திவைப்பதாக அறிவித்தபின் 27 சதவீதம் திடீரென சரிந்தன.
இதையடுத்து ட்விட்டர் நிறுவனத்துக்கு இழப்பு ஏற்படுத்தியதாகவும், ட்விட்டர் நிறுவனத்தைப் பற்றி தவறான தகவல் பரப்பியது, ட்விட்டர் நிர்வாகத்தில் புகுந்து குழப்பத்தை ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் கலிபோர்னியா வடக்கு மாவட்ட நீதிமன்றத்தில் எலான் மஸ்க் மீது வழக்குத் தொடரப்பட்டது.
இதற்கிடையே ஹெச்எஸ்ஆர் சட்டத்தின் கீழ் ட்விட்டர் நிறுவனத்தை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வாங்கிக்கொள்வதாக செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் காலக்கெடுவும் முடிந்துவிட்டது. இதனால், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் எலான் மஸ்கின் ஒப்பந்தம் முறைப்படி முடிவுக்கு வந்துவிட்டதாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.