
elon musk tesla :ட்விட்டர் நிறுவனம் போலிக் கணக்குகள் மற்றும் ஸ்பாம் குறித்த விவரங்களை வழங்காவிட்டால் 4400 கோடி டாலர் மதிப்பிலான ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை முடித்துக்கொள்வேன் என்று டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தில் 9 சதவீதத்துக்கும் அதிகமான பங்குகளை விலைக்கு வாங்கினார். இதன் மூலம் அதிகமாக பங்குகளை வைத்திருக்கும் தனிநபர் என்ற பெருமையைப் பெற்றார். ஆனால், ட்விட்டர் நிர்வாகக் குழுவில் அழைப்பு விடுக்கப்பட்டபோது, அதில் இணைவதற்கு எலான் மஸ்க் மறுத்துவிட்டார்
அடுத்த சில நாட்களில் ட்விட்டர் சமூக வலைதளத்தை 4400 கோடி டாலருக்கு நானே வாங்கிக்கொள்கிறேன் என்று எலான் மஸ்க் அறிவித்தார். ட்விட்டர் நிறுவனத்தில் உள்ள ஒவ்வொரு பங்கையும் 54.20 டாலருக்கு வாங்க விரும்புவதாகவும் எலான் மஸ்க் பங்குச்சந்தையில் பைலிங்கில் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக ட்விட்டர் நிறுவனத்துக்கும், எலான் மஸ்கிற்கும் ஒப்பந்தம் கையொப்பமானது. ஆனால், திடீரென ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் தனது முடிவை ஒத்திவைப்பதாக எலான் மஸ்க் தெரிவித்தார்.
ட்விட்டர் நிறுவனத்தில் ஏராளமான போலிக் கணக்குகள் இருப்பதால், அதுதொடர்பாக தகவல்கள் தேவை என்று எலான் மஸ்க் கோரியிருந்தார். ஆனால் ட்விட்டர் நிறுவனம் அது குறித்த விவரங்களை வழங்கவில்லை. இது தொடர்பாக பலமுறை ட்விட்டர் நிறுவனத்துக்கு எலான் மஸ்க் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
. இந்நிலையில் எலான் மஸ்க் எழுத்துபூர்வமாக தனது வழக்கறிஞர்கள் மூலம் ட்விட்டர் நிறுவனம் போலிக் கணக்கு விவரங்களைத் தராவிட்டால் ஒப்பந்தத்தை முறித்துவிடுவேன் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதில், “ ட்விட்டர் நிறுவனத்தில் இருக்கும் போலிக் கணக்குகள், ஸ்பாம் ஆகியவை குறித்த விவரங்களை வழங்க வேண்டும். இல்லாவிட்டால் இந்தஒப்பந்தத்தை முறித்துக்கொள்ள எனக்கு உரிமை உண்டு. நாங்கள் கேட்ட விவரங்களை ட்விட்டர் நிறுவனம் வெளிப்படையாகவே தர மறுக்கிறது, இது ஒப்பந்தத்தை மீறியதாகும். இது ஒப்பந்தத்தில் மேலும் சந்தேகத்தை எழுப்புகிறது” எனத் தெரிவித்திருந்தார்.
ஆனால், எலான் மஸ்க்கின் கடிதத்துக்கு ட்விட்டர் சார்பில் எந்தவிதமான பதிலும் அளிக்கவில்லை. எலான் மஸ்க் ஒரு ஒப்பந்தத்தை செய்துவிட்டு, அதை முடிக்காமல் இழுத்தடிப்பது முதல்முறையாகும்.
இதற்கிடையே ஹெச்எஸ்ஆர் சட்டத்தின் கீழ் ட்விட்டர் நிறுவனத்தை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வாங்கிக்கொள்வதாக செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் காலக்கெடுவும் எலான் மஸ்கிற்கு முடிந்துவிட்டது. இதனால், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் எலான் மஸ்கின் ஒப்பந்தம் முறைப்படி முடிவுக்கு வந்துவிட்டதாக ட்விட்டர் நிறுவனம் கடந்த வாரம் அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.