
அடுத்தவர்கள் ஆதார் எண், வங்கி கணக்கு எண் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை சமூகஊடகங்களில் யாரேனும் வெளியிட்டால், ஆதார் சட்டப்படி அதுதண்டனைக்குரிய குற்றமாகும். இதற்கு அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புண்டு என அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அனைத்து மத்திய அரசு துறைகள், மாநில அரசுகள், யூனியன்பிரதேசங்கள் அனைத்துக்கும் உத்தரவிட்டுள்ள மத்திய அரசு, மக்களின் ஆதார் எண்கள், வங்கி விவரங்கள், தனிப்பட்ட விவரங்களை பொதுப்படையாக வெளியிட வேண்டாம். அதிலும் குறிப்பாக சமூகஊடகங்களில், இணைதயங்களில் வெளியிட வேண்டாம். அவ்வாறு வெளியிட்டு இருந்தால், அதை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
கிரிக்கெட் வீரர் தோனியின் ஆதார் எண், விண்ணப்பம் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் நேற்றுமுன்தினம் சமூகஊடகங்களில் வெளியாகி காட்டுத்தீயாக பரவியது. இது குறித்து தோனியின் மனைவி மத்தியஅமைச்சர் ரவிசங்கர்பிரசாத்துக்கு டுவிட்டரில் புகார் அனுப்பி இருந்தார். அதைத்தொடர்ந்து இந்த விவகாரம் நாடாளுமன்றத்தின் மாநிலங்கள் அவையிலும் எதிரொலித்தது. முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரமும், நிதிஅமைச்சர் அருண் ஜெட்லியும் ஆதார் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து கடும் விவாதம் செய்தனர்.
மேலும், மத்திய அரசின் பல்வேறு துறைகள், மாநிலஅரசின் பல்வேறு துறைகள் திரட்டும் மக்களின் ஆதார் எண்கள், வங்கிக்கணக்குஎண்கள், உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள் இணையதளங்கள் வாயிலாக எளிதாக எடுத்துவிடலாம் என சமூக ஆர்வலர்களும், தனிநபர் உரிமைக் காவலர்களும் அரசிடம் கவலைத் தெரிவித்தனர்.
இதையடுத்து, இந்த உத்தரவை மத்தியஅரசு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 25-ந்ததேதியிட்டு அனைத்து துறைகள், மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களில் உள்ள தலைமைச் செயலாளர்கள், ஐ.டி. துறை செயலாளர்கள், தேசிய தகவல்களை மேலாண்மை செய்யும் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு இந்த சுற்றறிக்கையை மத்தியஅரசு அனுப்பிவிட்டது.
மேலும், தனிப்பட்ட ஒரு நபரின் ஆதார் எண், வங்கி எண், உள்ளிட்ட விவரங்களை வெளியிடுவது 2016-ஆதார் சட்டம், 2000-தகவல் தொழில்நுட்பச் சட்டம் ஆகியவற்றின்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.
அவ்வாறு தகவல்களை வெளியிடுவோர் மீது ஆதார் சட்டம், தகவல் தொழில் நுட்ப சட்டம் பிரிவு 29, 37,40, 41 ஆகியவற்றின் வழக்குப் பதிவு செய்யப்படும். இதற்கு அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை கிடைக்கும் என அரசு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.