
நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகமாக கொண்டாடப்பட்டது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் மக்கள் புத்தாடை உடுத்தியும், பட்டாசுகளை வெடித்தும் தீபாவளியை கொண்டாடினார்கள். தீபாவளிக்கு மக்கள் புத்தாடைகள் மட்டுமின்றி தங்க, வைர நகைகள், கார்கள், பைக்குகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களையும் வாங்கி குவித்தனர்.
இந்நிலையில், இந்த ஆண்டு தீபாவளி விற்பனை ரூ.6.05 லட்சம் கோடியைத் தொட்டதாகவும்,சுமார் 87% நுகர்வோர் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களைத் தேர்ந்தெடுத்தனர் என்றும் அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பின் (CAIT) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. CAIT-ன் படி, மொத்த வர்த்தகம் 5.40 லட்சம் கோடி ரூபாய் பொருட்களையும், 65,000 கோடி ரூபாய் சேவைகளையும் உள்ளடக்கியது, இது இந்திய வர்த்தக வரலாற்றில் மிக உயர்ந்த தீபாவளி வணிகமாக பதிவாகியுள்ளது.
CAIT ஆராய்ச்சி & வர்த்தக மேம்பாட்டு சங்கம், நாடு முழுவதும் 60 முக்கிய விநியோக மையங்களில், மெட்ரோக்கள், மாநில தலைநகரங்கள் மற்றும் டயர் 2 மற்றும் 3 நகரங்களில் நடத்திய விரிவான ஆய்வை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டது. இந்த ஆண்டு ரூ. 6.05 லட்சம் கோடி வர்த்தகம், 2024 ஆம் ஆண்டின் ரூ.4.25 லட்சம் கோடியை விட 25% அதிகமாகும்.
இந்திய பொருட்கள் மீது மக்களின் ஆர்வம் அதிகரிப்பு
மேலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களின் (Made In India) விற்பனை கடந்த ஆண்டை விட 25% அதிகரித்துள்ளது. ஜிஎஸ்டி சீர்திருத்தம் செய்யப்பட்ட பிறகு நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களை இந்தியர்கள் அதிக அளவில் வாங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இப்போது உள்நாட்டு பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளது பிரதமர் மோடியின் பேச்சை மக்கள் ஏற்றுக் கொண்டதாக அமைந்துள்ளது.
எந்த பொருட்கள் அதிகம் விற்பனை?
தீபாவளி விற்பனையில் மளிகை மற்றும் FMCG (12%), தங்கம் மற்றும் நகைகள் (10%), மின்னணுவியல் மற்றும் மின்சாதனங்கள் (8%), நுகர்வோர் சாதனங்கள் (7%), ஆடை மற்றும் பரிசுகள் (தலா 7%), வீட்டு அலங்காரம் மற்றும் தளபாடங்கள் (தலா 5%), மற்றும் இனிப்புகள் மற்றும் நம்கீன் (5%) மற்றும் இதர பொருட்கள் மொத்த வர்த்தகத்தில் 19% பங்கைக் கொண்டிருந்தன என்று CAIT வெளியிட்ட அறிக்கையின்படி தெரியவந்துள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.