தனத்திரியோதசியான நேற்று நாடு முழுவதும் ரூ.50 ஆயிரம் கோடிக்கு மேல் வர்த்தகம் நடந்ததாக அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் பல மாநிலங்கள் குறிப்பாக வட மாநிலங்களில் தீபாவளி 5 நாள் பண்டியாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி தனத்திரியோதசி உடன் நேற்று முதல் தொடங்கி உள்ளது. தனத்திரியோதசி அன்று தங்கம் மற்றும் வெள்ளி வாங்குவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. எனவே தனத்திரியோதசியான நேற்று நாடு முழுவதும் ரூ.50 ஆயிரம் கோடிக்கு மேல் வர்த்தகம் நடந்ததாகவும், அதில் ரூ.30 ஆயிரம் கோடிக்கு தங்கம் மற்றும் வெள்ளியில் மட்டுமே வர்த்தகம் நடந்துள்ளதாகவும் அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு ( Traders’ body Confederation of All IndiaTraders - CAIT) தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் ரூ.50 ஆயிரம் கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெற்றதாக CAIT வணிக அமைப்பின் தேசிய பொதுச் செயலாளர் பிரவீன் கண்டேல்வால் தெரிவித்தார். டெல்லியில் மட்டும் ரூ.5 ஆயிரம் கோடி வர்த்தகம் நடந்துள்ளதாக அவர் தெரிவித்தார். நேற்று விநாயகர், லட்சுமி மற்றும் குபேரர் ஆகியோரின் சிலைகள் அல்லது படங்கள் வாங்கப்பட்டதாகவும், அதே நேரத்தில், வாகனங்கள், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், பாத்திரங்கள், சமையலறை உபகரணங்கள், துடைப்பம் உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதும் இந்த நாளில் மங்களகரமானதாக கருதப்படுகிறது.
இதனிடையே நேற்று தங்கம் மற்றும் வெள்ளியின் மொத்த விற்பனை சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் என்று அகில இந்திய நகைக்கடை மற்றும் பொற்கொல்லர் சம்மேளனத்தின் (AIJGF) தேசிய தலைவர் பங்கஜ் அரோரா தெரிவித்தார். இதில் தங்கம் ரூ.27 ஆயிரம் கோடிக்கும், வெள்ளி ரூ.3000 கோடிக்கும் விற்பனை செய்யப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு தனத்திரியோதசியில் இந்த வர்த்தகம் சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்ததாக அவர் கூறினார். கடந்த ஆண்டு 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.52,000 ஆக இருந்தது, இம்முறை 10 கிராமுக்கு ரூ.62,000 ஆக உள்ளது. அதேசமயம், கடந்த தீபாவளியன்று ரூ.58,000-க்கு விற்பனை செய்யப்பட்ட வெள்ளியின் விலை தற்போது கிலோ ரூ.72,000-க்கு விற்பனையாகிறது. ஒரு மதிப்பீட்டின்படி, இந்த ஆண்டு தனத்திரியோதசியான நேற்று நாட்டில் சுமார் 41 டன் தங்கம் மற்றும் சுமார் 400 டன் வெள்ளி நகைகள் மற்றும் நாணயங்கள் விற்பனை செய்யப்பட்டன.
5 நாட்கள் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை , நேற்று தனத்திரியோதசியுடன் தொடங்கியது.அழ் தன்வந்திரி ஜெயந்தி என்றும் அழைக்கப்படும் இந்த பண்டிகை, தீபாவளி பண்டிகையின் முதல் நாள். இந்நாளில் லட்சுமி தேவி, குபேர், விநாயகர் மற்றும் தன்வந்திரி ஆகியோரை மக்கள் வழிபடுகின்றனர். இந்த நாளில் தீப தானமும் செய்யப்படுகிறது. இன்று நரக் சதுர்தசிரூப் சதுர்த்தசியும், நவம்பர் 12ம் தேதி தீபாவளியும், நவம்பர் 13ம் தேதி கோவர்தன் பூஜையும், 15ம் தேதி பையா தூஜ் திருவிழாவும் தீபாவளி கொண்டாட்டம் முடிவடையும்.