
வருமானத்துக்கு தொடர்பில்லாத, கணக்கில் காட்டப்படாத டெபாசிட் பணத்துக்கு 60 சதவீதம் வரி விதித்தும், அந்த பணத்தை 4 ஆண்டுகளுக்கு வங்கியில் இருந்து எடுக்க முடியாத வகையில் முடக்கி வைக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக வருமான வரிச்சட்டத்தில் திருத்தத்தை நடப்புக் கூட்டத் தொடரில் கொண்டுவரவும் அமைச்சரவை நேற்று முன் தினம் கூடி ஆலோசனை நடத்தியுள்ளது.
தடை அறிவிப்பு
நாட்டில் கருப்பு பணம், கள்ளநோட்டுகளை ஒழிக்கும் வகையில், ரூ.1000, ரூ500 நோட்டுகளை தடைசெய்து பிரதமர் மோடி கடந்த 8-ந் தேதி அறிவித்தார். அதைத் தொடர்ந்து வங்கிகள், தபால் நிலையங்களில் மக்கள் பழைய ரூபாய்களை மாற்றலாம், டெபாசிட் செய்யலாம் எனக் கூறியது. இதில் ரூபாய் மாற்றும் காலக்கெடு நேற்று முன்தினத்தோடு முடிவுக்கு வந்தது. இனி வங்கிகளில் டெபாசிட் மட்டுமே செய்ய முடியும்.
ரூ.21 ஆயிரம் கோடி
இதற்கிடையே ஜனதன் வங்கிக் கணக்குகளில் திடீரென டெபாசிட் அதிகரித்து, ரூ.21 ஆயிரம் கோடியாக உயர்ந்தது. கருப்பு பணத்தை பதுக்குவோர், கணக்கில் வராத பணம் ஆகியவை ஜன்தன் கணக்குகளில்டெபாசிட் செய்யப்படுவதாக அரசுக்கு தகவல் கிடைத்தது. மேலும் டிசம்பர் 30-ந்தேதி வரை, வங்கிக் கணக்குகளில் ரூ.2.50 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்யப்படும் கணக்குகளையும் அரசு கண்காணிக்கத் தொடங்கியது.
அமைச்சரவை
இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை நேற்று முன் தினம் கூடி, கணக்கில் வராத டெபாசிட்களுக்கு வரி விதிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தியது. அந்த கூட்டத்தில், 30 சதவீதம் வரி மற்றும் 30 சதவீதம் அபராதம் என மொத்தம் 60 சதவீதம் வரி விதிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தானாக முன்வந்து வருமானத்தை தெரிவிக்கும் திட்டத்தில் விதிக்கப்பட்ட 45 சதவீத வரியைக்காட்டிலும் அதிகமாகும்.
60 சதவீதம் வரி
வருமானத்துக்கு அதிகமாக, கணக்கில் வராத டெபாசிட்களுக்கு 60 சதவீதம் வரியும், வங்கியில் செய்யப்பட்ட டெபாசிட்டை நீண்ட காலத்துக்கு முடக்கி வைக்கவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
4 ஆண்டு முடக்கம்
அதேபோல, தானாக முன்வந்து கணக்கில்வராத டெபாசிட் என்று சொல்பவர்களின் டெபாசிட்களுக்கு 50 சதவீதம் வரியும், அவர்களின் டெபாசிட் பணத்தை 4 ஆண்டுகளுக்கு முடக்கி வைக்கவும் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இதற்காக வருமானவரிச் சட்டத்தில் நடப்பு குளிர்காலக் கூட்டத்தொடரில் திருத்தம் கொண்டுவரவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக் கூறப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.