
டெல்லி அரசின் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ரூ.75,800 கோடி மதிப்பிலான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். அதில் அடுத்த 5ஆண்டுகளில் 20 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தபின் 8-வது பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. துணை முதல்வரும்,நிதிஅமைச்சருமான மணிஷ் ஷிசோடியாவும் தனது 8வது பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார்.
பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதிஅமைச்சர் மணிஷ் ஷிசோடியா பேசியதாவது:
வேலைவாய்ப்பு திட்டம்
டெல்லிஅரசின் பட்ஜெட் மதிப்பு கடந்த நிதியாண்டைவிட வரும் நிதியாண்டு 9.86 சதவீதம் அதிகமாகும். கடந்த நிதியாண்டில் ரூ.69ஆயிரம் கோடி மதிப்பில் பட்ஜெட் தாக்கல்செய்யப்பட்டது. வரும் நிதியாண்டில் ரூ.75,800 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
டெல்லியின் பொருளாதாரம் கொரோனா பாதிப்பிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறது. வரும் நிதியாண்டிலிருந்து டெல்லியில் உள்ள லட்சக்கணக்காண இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
கல்வித்துறை
சுகாதாரத்துறைக்கு ரூ.9,669 கோடியும், கல்வித்துறைக்கு ரூ.16,278 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில்20 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க ரூ.4,500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். அடுத்த நிதியாண்டுக்கு ரூ.800 கோடி ஒதுக்கப்படும்.
டெல்லி மாநிலத்தில் உள்ள சில்லரை மற்றும் மொத்த வணிகர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஷாப்பிங் திருவிழா நடத்தப்படும். சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் வகையில் இடத்தில் இந்த ஷாப்பிங் திருவிழா நடத்தப்படும், இதன் மூலம் வேலைவாய்ப்பும் உருவாகும். இந்த நிதியாண்டு இதற்காக ரூ. 250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆண்டு்க்கு ஒரு லட்சம் வேலைவாய்ப்பு
டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை ஈர்க்கும் வகையில், பாப்ரோலா பகுதியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்பட்டு, அதன்மூலம் 80 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
டெல்லியில் உள்ள உணவுகளைப் பிறமாநிலத்தவர்களுக்கும் பிரபலப்படுத்தும் வகையில், உணவுக் கொள்கையும் உருவாக்கப்படும். இந்த உணவு டிரக்குகள் சாலைகளில் இரவு 8மணி முதல் அதிகாலை 2 மணிவரை செயல்படும்.
மருத்துவத்துறை
ஸ்மார்ட் நகர்ப்புற விவசாயத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக 25ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். மாநில அரசுகளால் நடத்தப்படும் அரசு மருத்துவமனைகளை மேம்படுத்த ரூ.1900 கோடி நிதி ஒதுக்கப்படும். இதில் மொஹல்லா கிளினிக்குகளுக்கு மட்டும் ரூ.475 கோடி ஒதுக்கப்படும்.
அடுத்த 2ஆண்டுகளில் டெல்லியில் ஓடும் யமுனை நிதி முற்றிலும் சுத்தம் செய்யப்படும். டெல்லி மக்களுக்கு தற்போது வழங்கப்படும் குடிநீர் அளவைவிட 10 சதவீதம் கூடுதலாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு ஷிசோடியா தெரிவித்தார்
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.