மத்திய அரசு 2024-2025 ஆம் ஆண்டிற்கான முழு பட்ஜெட்டை ஜூலை மாதம் மத்தியில் தாக்கல் செய்யுவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மத்தியில் மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. நரேந்திர மோடி 3ஆவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ளார். அவருடன் 71 அமைச்சர்களும் பதவியேற்றுள்ளனர். அவர்களுக்கான இலாக்கக்கள் ஒதுக்கப்பட்டு, முறைப்படி தங்களது அலுவலகங்களில் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.
தொடர்ந்து, 18ஆவது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 24ஆம் தேதி முதல் ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் மக்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவிப் பிரமாணம், மக்களவைத் தலைவர் தேர்வு, குடியரசுத் தலைவர் உரை மற்றும் அது குறித்த விவாதங்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் கிரன் ரிஜிஜு வெளியிட்டுள்ளார்.
undefined
நாடாளுமன்ற கூட்டத்தொடர் குறித்தான அட்டவணையின்படி, இந்த அமர்வு காலவரையின்றி ஒத்திவைக்கப்படாது எனவும், 2024-2025 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கலுக்காக நாடாளுமன்ற அமர்வின் இரண்டாம் பகுதி மீண்டும் தொடங்கும் எனவும் தெரிகிறது.
மத்திய பட்ஜெட் என்பது, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்படுகிறது. இது ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரை வரவிருக்கும் நிதியாண்டிற்கான முழு நிதிநிலை அறிக்கையாக செயல்படுகிறது. ஆனால், நடப்பாண்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற்றதால், பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
மோடி 3.0 அமைச்சரவையில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை - செல்வபெருந்தகை!
எனவே, புதிய அரசு அமைந்ததும் 2024-25ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி, 2024-25ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட் ஜூலை மாதம் மத்தியில் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் பங்குதாரர்களுடன் பட்ஜெட் கூட்டங்களுக்கு முந்தைய ஆலோசனையை நிதியமைச்சகம் ஜூன் 17 ஆம் தேதிக்குள் தொடங்கும் எனவும் அந்த தகவல்கள் கூறுகின்றன. வரவிருக்கும் பட்ஜெட் குறித்த விவரங்களை மத்திய அரசு வெளியிடவில்லை. ஆனாலும், ரிசர்வ் வங்கியின் ஈவுத்தொகையான ரூ.2.11 டிரில்லியன் பயன்பாடு குறித்த விவரங்கள் இதில் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், 2023-24 நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையின் தொடங்கும் என்றும், அதைத் தொடர்ந்து 2024-25ஆம் நிதியாண்டுக்கான முழு மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார் என்றும் தெரிகிறது. பிரதமர் மோடி அரசாங்கத்தின் கீழ் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதுவரை ஆறு முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். தொடர்ந்து 7ஆவது முறையாக அவர் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் தொடர்வதை உறுதி செய்வதுடன், கூட்டணிக் கட்சிகளின் நிதிக் கோரிக்கைள் உள்ளிட்ட பல்வேறு சவால்கள் மத்திய கூட்டணி அரசின் நிதியமைச்சரான நிர்மலா சீதாரமன் முன்பு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.