தேசிய ஓய்வூதிய திட்டம் குறித்து மறுஆய்வு செய்ய நான்கு பேர் கொண்ட குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது.

By Dhanalakshmi GFirst Published Apr 7, 2023, 3:03 PM IST
Highlights

புதிய ஓய்வூதிய முறையின் கீழ் அரசாங்க ஊழியர்களுக்கு கூடுதல் சலுகைகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக புதிய குழுவை நிதியமைச்சகம் அமைத்துள்ளது. புதிய ஓய்வூதிய முறையில் ஏதேனும் மாற்றங்கள் தேவையா என்பதை இந்தக் குழு ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்கும்.

அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டத்தை மறுஆய்வு செய்ய மத்திய நிதி அமைச்சகம் ஒரு குழுவை அமைத்தது. மத்திய நிதித்துறை செயலாளர் டி.வி.சோமநாதன் தலைமையிலான குழுவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அமைத்து இருக்கிறார். புதிய ஓய்வூதிய முறையின் கட்டமைப்பில் ஏதேனும் மாற்றங்கள் தேவையா என்பதை இந்தக் குழு ஆய்வு செய்து தேவையான பரிந்துரைகளை வழங்கும். அந்த பரிந்துரையின் அடிப்படையில் மத்திய அரசு இறுதி முடிவு எடுக்கும். 

இதற்கிடையில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் (ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்கண்ட், பஞ்சாப் மற்றும் இமாச்சல பிரதேசம்) பழைய ஓய்வூதியத் திட்டங்கள் மீண்டும் கொண்டு வரப்பட்டு, புதிய ஓய்வூதிய முறை கைவிடப்பட்டது. பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள அரசு ஊழியர்களும் இதே கோரிக்கைகளை எழுப்பியுள்ளனர். இது மத்திய அரசின் மீதான அழுத்தத்தை அதிகரித்துள்ளது, ஆனால் பழைய ஓய்வூதிய முறையை மீண்டும் கொண்டு வருவதற்கான எந்த திட்டத்தையும் பரிசீலிக்கவில்லை என்று நிதி அமைச்சகம் கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தி இருந்தது. 

இருந்தபோதும், புதிய ஓய்வூதிய முறையின் கீழ் அரசாங்க ஊழியர்களுக்கு கூடுதல் சலுகைகள் கிடைக்கும் வகையில் புதிய குழுவை அமைக்க நிதியமைச்சகம் தீர்மானித்துள்ளது. குழுவின் பணி என்னவாக இருக்கும்? புதிய ஓய்வூதிய முறையின் கீழ் வரும் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் தொடர்பான கூடுதல் பலன்கள் கிடைக்கும் வகையில் ஏதேனும் விதிகளில் திருத்தம் செய்ய முடியுமா என்பதை இந்தக் குழு ஆராயும் என்று நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அறிமுகம் செய்ய வேண்டும் என்று ரயில்வே ஊழியர்கள் மற்றும் சில தொழிற்சங்கங்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றன. தமிழ்நாடு போன்ற மாநிலங்களிலும் அரசு ஊழியர்கள் இந்த அழுத்தத்தை வைத்து வருகின்றனர். 

பழைய ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன?

பழைய ஓய்வூதிய முறையில், அரசு ஊழியர்கள் தங்களது கடைசி மாத சம்பளத்தில் 50 சதவீதத்தை மாதாந்திர ஓய்வூதியமாக பெற்று வந்தனர். அகவிலைப்படி (DA) அதிகரித்தால், தொகை அதிகரிக்கும். ஆனால் பல பொருளாதார வல்லுனர்களின் கூற்றுப்படி, பழைய ஓய்வூதிய முறை பொருளாதார ரீதியாக நல்லதல்ல. பழைய ஓய்வூதிய முறையால், அரசு கருவூலத்திற்கு அழுத்தம் அதிகரித்து வருவதாக கருத்து தெரிவித்துள்ளனர். செலவுகள் அதிகரித்துக் கொண்டே இருக்கும். நிதிப் பற்றாக்குறை தொடர்ந்து அதிகரிக்கும் என்று ஆலோசனை வழங்கி வருகின்றனர். 

அந்த நிலையில், 2004 ஜனவரி 1ம் தேதி அல்லது அதற்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு (ஆயுதப் படையில் இணைந்தவர்கள் தவிர) புதிய ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

click me!