வங்கிகளை விட அதிக வட்டி வழங்கும் பெண்களுக்கான சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு நிறுத்த உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.
மகிளா சம்மான் சேமிப்பு திட்டம்
2025–26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை வரும் பிப்ரவரி 1ம் தேதி அன்று காலை 11 மணிக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பதவி ஏற்ற பிறகு தாக்கல் செய்யபபடும் இரண்டாவது பட்ஜெட் இதுவாகும். இது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யப்போகும் எட்டாவது மத்திய பட்ஜெட் ஆகும்.
மத்திய பட்ஜெட்டை நாடு முழுவதிலும் உள்ள மகக்ள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் நிலையில், பெண்களுக்கான சிறு சேமிப்பு திட்டம் ஒன்றை மத்திய அரசு மார்ச் மாதம் முதல் நிறுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பெண்களின் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக கடந்த 2023ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டின் போது 'மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம்' திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.
வங்கிகளை விட அதிக வட்டி
பெண்களுக்கான ஒரு குறுகிய கால சேமிப்பு திட்டமான மகிளா சம்மான் சேமிப்பு திட்டம் இரண்டு வருட காலத்திற்குக் கிடைக்கிறது. இது பெண்கள் ரூ.2 லட்சம் வரை டெபாசிட் செய்ய அனுமதிக்கிறது. பெண்கள் இந்த சேமிப்பு திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் ரூ.2,00,000 வரை முதலீடு செய்யலாம். இதற்கு ஆண்டுக்கு 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. அதாவது வங்கிகளை விட அதிக வட்டி வழங்கப்படுகிறது.
இது பெண்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய சிறு சேமிப்பு திட்டமாக தொடங்கப்பட்டது. இந்நிலையில், இந்த 'மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம்' திட்டம் மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதனால் மத்திய பட்ஜெட்டில் இந்த திட்டத்தை நீட்டிப்பு செய்வது குறித்து அறிவிப்பு வெளியாகுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
வைப்புத் தொகை வரவில்லை
மகிளா சம்மன் சேமிப்புத் திட்டம் ஆரம்பத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே தொடங்கப்பட்டாலும், பெண்கள் மத்தியில், குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட குழுக்களைச் சேர்ந்த பெண்களிடையே சேமிப்பை ஊக்குவிப்பதில் இது முக்கிய பங்கு வகித்துள்ளது, அதே நேரத்தில் பெண்களின் அதிகாரமளிப்பையும் ஊக்குவித்துள்ளது.
ஆனால் கடந்த ஆண்டில் இந்த திட்டத்தில் பெண்களிடம் இருந்து பெரிய அளவில் வைப்புத் தொகை வரவில்லை. இதனால் இந்த திட்டம் நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை என்று வெல்த் டிரஸ்ட் கேபிடல் சர்வீசஸின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக இயக்குநர் சினேகா ஜெயின் தெரிவித்துள்ளார். அதே வேளையில் இந்த திட்டம் நிறுத்தப்பட வாய்ப்பில்லை என்று ஃபைனான்ஸின் மியூச்சுவல் ஃபண்டுகளின் மூத்த துணைத் தலைவர் ரஜனி தடனே கூறியுள்ளார்.
நிறுத்த வாய்ப்பில்லை
''பெண்களை மையமாகக் கொண்ட கொள்கைகளில் அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதால் இந்தத் திட்டத்திற்கு நீட்டிப்பு இருக்கலாம். இல்லாவிடில் இந்த திட்டத்துக்கு மாற்றாக பெண்களுக்கான ஒரு புதிய சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு உருவாக்க வாய்ப்புள்ளது'' என்று ரஜனி தடனே கூறியுள்ளார்.