
கிரெடிட் கார்டு, டெபிட் கார்டில் டோக்கனைசேஷன் விதிமுறை ஜூலை முதல் தேதி முதல் அமலாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அதை அமல்படுத்துவதற்கு செப்டம்பர் 30ம் தேதிவரை அவகாசம் அளித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, டோக்கனைசேஷன் விதிமுறை அமலுக்கு வந்தால், ஆன்-லைன் வர்த்தக நிறுவனங்கள், இணையதளங்கள் வாடிக்கையாளர்களின் கார்டு டேட்டாக்களை சேமித்து வைக்க முடியாது. ஆனால், விதிமுறை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டிருப்பதால், அதுவரை சேமித்துக்கொள்ளலாம்.
வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக கடந்த ஆண்டு டெபிட், கிரெடிட்கார்டு டோக்கனைஷேசன் விதிகள் கொண்டுவரப்பட்டது. இந்தப் புதிய விதிகளை ஏற்க 2022, ஜனவரி 1ம் தேதி காலக்கெடு விதித்திருந்தது ரிசர்வ் வங்கி, பல்வேறு நிறுவனங்கள் கோரிக்கையையடுத்து, ஜூலை 1ம் தேதி நீட்டிக்கப்பட்டது. இப்போது டோக்கனைசேஷன் விதிகளை அமல்படுத்துவதில் பல்வேறு நடைமுறைச்சிக்கல்கள் இருப்பதாக ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் கோரிக்கையை ஏற்று மேலும் 3 மாதங்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, “ டோக்கனைசேஷன் அமல்படுத்துவது குறித்து அது தொடர்பான அனைத்து தரப்பினருடனும் ஆலோசிக்கப்பட்டு, வாடிக்கையாளர்களுக்கு சிரமம், தொந்தரவு ஏற்படாமல் தவிர்க்க முடிவு எடுக்கப்பட்டது. டோக்னைசேஷனை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு தொழில்நுட்ப சிக்கல் இருப்பதாக நிறுவனங்கள் தெரிவித்தன.
அதனால் இதை முழுமையாக அமல்படுத்துவதற்கு அவகாசம் கோரின. இதன்படி டோக்கனைசேஷன் விதிகளை அமல்படுத்துவதற்கு ஜூன்30ம் தேதிவரை காலக்கெடு முன்பு விதித்திருந்தோம். அதை செப்டம்பர் 30ம் தேதிவரை நீட்டிக்கிறோம். இந்தக் காலக்கெடுவைப் பயன்படுத்தி அனைத்துதரப்பினரும் டோக்கனைசேஷனை அமல்படுத்துவதற்கு தங்களை தயார்செய்து கொள்ள வேண்டும். அதற்கான மாற்று வழிகளைத் தேட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.
டோக்கனைசேஷன் என்றால் என்ன
டோக்கனைசேஷன் விதிகள் மூலம் வாடிக்கையாளர்கள் ஆன்-லைனில் பொருட்கள், சேவைகள், பணப்பரிவர்த்தனை செய்யும்போது, தங்களின் கார்டுகள் குறித்த முழுமையான விவரங்களை தெரிவிக்காமல் பாதுகாப்பாக பரிவர்த்தனை செய்வதாகும்.
இந்த முறையில் வாடிக்கையாளர்கள் விவரங்கள் அனைத்தும் ஆன்-லைன் நிறுவனங்கள் பார்க்க முடியாத வகையில் மறைக்கப்படும். அதுமட்டுமல்லாமல் ஆன்-லைன் நிறுவனங்கள் ஏற்கெனவே வாடிக்கையாளர்கள் விவரங்களைச் சேகரித்து வைத்திருந்தாலும் அதையும் அழித்துவிட வேண்டும். அதாவது டெபிட், கிரெடிட் கார்டுகளில் வாடிக்கையாளர் பெயர், பின், சிவிவி, வேலிடிட்டி காலம் என எதையும் சேமிக்கக்கூடாது.
எப்படி செயல்படும்?
ஆன்-லைன் வர்த்தகத் தளங்களில் வாடிக்கையாளர்கள் குறித்த எந்தவிவரங்களும் சேமிக்கப்படாது என்பதால், இனிமேல் வாடிக்கையாளர்கள் ஒவ்வொருமுறை ஆன்லைன் பரிவர்த்தனை செய்யும்போதும் கார்டு எண், வேலிடிட்டி, சிவிவி, பெயர் ஆகியவற்றை பதிவிட்டு பரிவர்த்தனை செய்ய வேண்டும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.