
ரூபாய் நோட்டு தடையால், கடுமையாக வீழ்ச்சி அடைந்து இருக்கும் ரியல் எஸ்டேட் துறையை ஊக்கப்படுத்தவும், உற்சாகப்படுத்தவும், வரும் 2017-18ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், வீட்டுக்கடன் பெற்றவர்களுக்கும், வீட்டுக்கடன் பெறுவர்களுக்கும் வரிச்சலுகை இருக்கும்.
வங்கியில் வீட்டுக்கடன் பெற்று ஆண்டுக்கு ரூ. 2 லட்சத்துக்கு மேல் வட்டியும், தவணையும் செலுத்துவோர்களுக்கு புதிதாக வரிச்சலுகை உள்ளிட்ட பல சலுகைகள் பிப்ரவரி 1-ந்தேதி தாக்கலாகும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரூபாய் நோட்டு தடை அறிவிப்புக்குபின், நாட்டில் தொழில்துறை, ரியல்எஸ்டேட் துறை உள்ளிட்ட துறைகள் பெரும் மந்தமான சூழலை எதிர்கொண்டுள்ளன. அதை ஊக்கப்படுத்த பல சலுகைகள் வரும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
ரூபாய் நோட்டு தடைக்கு பின் வங்கியில் ஏராளமான டெபாசிட் தொகை குவிந்து உள்ளது. இதையடுத்து, ரியல் எஸ்டேட் துறையை தூக்கிவிடும் முயற்சியாக, வீட்டுக்கடனுக்கான வட்டி வீதத்தை குறைக்கச் சொல்லி மத்திய அரசு வங்கிகளுக்கு உத்தரவிடக் கூறலாம். இதன் மூலம் மக்களுக்கு அதிகமான வீட்டுக்கடன் அளிக்க வங்கிகள் முன்வரும். மேலும், வருமான வரி செலுத்துவோர்களுக்கும் உச்ச வரம்பு உயர்த்தப்படவும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும், கட்டுமானத்துறையை ஊக்கப்படுத்தும் விதமாக வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்துதல், சிமென்ட், உருக்கு கம்பிகள், உள்ளிட்ட கட்டுமான பொருட்களுக்கான தேவையை அதிகப்படுத்துதல் ஆகியவற்றுக்காகவும் சலுகைகள் அறிவிக்கப்படலாம்.
குறிப்பாக வாடகை வீட்டில் தங்கி இருப்போர், முதல் முறையாக சொந்த வீடு வாங்க நினைப்போருக்கு வீட்டுக் கனவை நனவாக்கும் வகையில் வரும் பட்ஜெட்டில் வீடு கடனுக்கான அதிரடி சலுகைகள், வட்டிக்குறைப்பு, வருமானவரி உச்சவரம்பு இருக்கும் எனத் தெரிகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.