மத்திய அரசு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ள நிலையில், வருமான வரி வரம்புகளில் மாற்றம் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
மத்திய பட்ஜெட் வழக்கமாக பிப்ரவரி மாதம் கடைசி வாரத்தில் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். இந்த முறையில் மாற்றம் செய்யப்பட்டு, பொது பட்ஜெட் மற்றும் ரயில்வே பட்ஜெட் இவை இரண்டும் சேர்த்து பிப்ரவரி முதல் வாரத்திலேயே தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, ஜனவரி கடைசி வாரத்தில் தொடங்கி ஏப்ரல் முதல் வாரம் வரை இரண்டு கட்டங்களாக பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், நடப்பாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் விரைவில் கூடவுள்ளது. இந்த ஆண்டில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளதால், முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படாமல் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும். பாஜகவின் இரண்டாவது ஆட்சி காலத்தில் தாக்கல் செய்யப்பட்டும் கடைசி மற்றும் இடைக்கால பட்ஜெட் இதுவாகும். நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ளதால், மத்திய பட்ஜெட் 2024 மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில், வருமான வரி வரம்புகளில் மாற்றம் தொடர்பான அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட்டில், வருமான வரிக்கு பல புதிய விதிமுறைகளை மத்திய அரசு கொண்டு வந்தது. குறிப்பாக, தனிநபர் வரிவிதிப்புகளில்.
ஆனால், மக்களவை தேர்தல் இந்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் வரவிருப்பதால், இந்த பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகள் எதுவும் இருக்காது என்று நிதியமைச்சர் சீதாராமன் முன்பு கூறியிருந்தார். மேலும், தேர்தல் ஆண்டில் இடைக்கால பட்ஜெட்டில் பெரிய திட்டங்களை அறிவிக்க முடியாது என்பதை தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிகள் சுட்டிக்காட்டுகின்றன.
இருப்பினும், பொருளாதார வல்லுநர்கள் தங்களது எதிர்பார்ப்புகளை பட்டியலிட்டுள்ளனர். வரி செலுத்துவோருக்கு உதவும் வகையில், சில வரி விதிகள் மற்றும் விலக்குகளை மத்திய அரசு கவனிக்க வேண்டும் என்று அவர்கள் கருதுகின்றனர்.
80D விலக்கு வரம்பு
கிளியர் டாக்ஸ் நிறுவனத்தின் அர்சித் குப்தா கூறுகையில், மருத்துவ காப்பீட்டு பிரீமியங்களுக்கான பிரிவு 80D இன் கீழ் விலக்கு வரம்பை தனிநபர்களுக்கு ரூ.25,000லிருந்து ரூ.50,000 ஆகவும், மூத்த குடிமக்களுக்கு ரூ.50,000லிருந்து ரூ.75,000 ஆகவும் உயர்த்துவது குறித்து மத்திய அரசு சிந்திக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். சுகாதாரச் செலவுகளுக்கு இடமளிக்க இந்தச் சரிசெய்தல் அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார். கூடுதலாக, புதிய வரி விதிப்புக்கு பிரிவு 80D நன்மைகள் நீட்டிக்கப்பட வேண்டும், இது சுகாதார சேவைகளுக்கு நியாயமான மற்றும் சமமான அணுகலை உறுதிப்படுத்த உதவும் எனவும் அர்சித் குப்தா தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்: நள்ளிரவு 12 மணிக்கு மேல் பேருந்துகள் ஓடாது!
அடிப்படை விலக்கு வரம்பு
அதிக பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு, புதிய மற்றும் பழைய வரி முறைகளில் அடிப்படை விலக்கு வரம்பு உயர்த்தப்பட வேண்டும் என்று மும்பையைச் சேர்ந்த பட்டயக் கணக்காளர் சிராக் சௌஹான் வலியுறுத்தியுள்ளார். அடிப்படை விலக்கு வரம்பை அதிகரிப்பதன் மூலம், பழைய மற்றும் புதிய வரி முறைகளில் உள்ள அடுக்குகள் முழுவதும் வரிப் பொறுப்பைக் குறைக்க முடியும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புதிய மற்றும் பழைய வரி முறைகளின் கீழ் அடிப்படை விலக்கு வரம்பு அதிக பணவீக்கம் காரணமாக மேலும் ரூ. 50,000 உயர்த்தப்படலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
வரிக்கு உட்பட்ட வருமானம்
2023-24 ஆம் ஆண்டிற்கான தனது பட்ஜெட் உரையில், வருமான வரி தள்ளுபடி வரம்பை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்துவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். வரி விதிக்கக்கூடிய வருமான வரம்பை மேலும் அதிகரிப்பது, சம்பளம் பெறும் வகுப்பினர் தங்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்லும் ஊதியத்தை அதிகரிக்கும் என்று டெலாய்ட் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் நிதின் பைஜால் கூறியுள்ளார்.
“வரி விதிக்கக்கூடிய வருமான வரம்பை உயர்த்துவதற்கான கோரிக்கை இல்லாமல் பட்ஜெட் விருப்பப்பட்டியல் முழுமையடையாது. இது வரி செலுத்துதலைக் குறைக்கும் அதேநேரத்தில் வரி செலுத்துவோர் அதிக ஊதியத்தை அனுபவிக்க முடியும், குறிப்பாக குறைந்த வரி சேமிப்பு விருப்பங்களைக் கொண்ட சம்பள வகுப்பினர்.” என நிதின் பைஜால் தெரிவித்துள்ளார்.
வீடு வாங்குபவர்களுக்கு டிடிஎஸ்
தற்போது, சொத்து வாங்குவதற்கான டிடிஎஸ் வரம்பு ரூ.50 லட்சமாக உள்ளது. சொத்தின் மதிப்பு இந்தத் தொகையை விட அதிகமாக இருந்தால், வாங்குபவரிடம் மொத்த பரிசீலனைத் தொகையில் 1% விகிதத்தில் டிடிஎஸ் கழிக்கப்படும். இந்த விதி குடியிருப்பு மற்றும் வணிக சொத்துக்களுக்கும் பொருந்தும். இந்த விதி என்.ஆர்.ஐ. விற்பனையாளர்களுக்கு மிகவும் சிக்கலானது. எனவே, இடைக்கால பட்ஜெட்டில் NRI விற்பனையாளர்களுக்கு இந்த விதியில் தெளிவுபடுத்தப்பட வேண்டும் என கிளியர் டாக்ஸ் நிறுவனத்தின் அர்சித் குப்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதிய வரி முறையில் வீட்டுக் கடன்
புதிய வரி விதிப்பு முறையின் கீழ், புதிய வரி அடுக்குகளை நிர்மலா சீதாராமன் அறிமுகப்படுத்திய பிறகு, பல வரி செலுத்துவோர், குறிப்பாக இளைஞர்கள், புதிய முறைக்கு விரைவாக மாறினார்கள். ஆனால், வீட்டுக்கடன் செலுத்த வேண்டியவர்கள் பழைய வரி விதிப்பு முறையில் சிக்கிக் கொண்டதாக ஹஸ்முக் ஷா & கோ.,-வின் பவேஷ் ஷா கூறியுள்ளார்.
“பட்ஜெட் 2023க்குப் பிறகு இந்த ஆண்டு நிறைய இளைஞர்கள் புதிய வரி விதிப்பு முறைக்கு மாறுவதை நாங்கள் பார்த்திருக்கிறோம். ஆனால் வீட்டுக் கடன் பெற்றவர்கள் மாற்றம் செய்யத் தயங்குகிறார்கள். 2 லட்சம் வீட்டுக் கடனுக்கான வட்டி விலக்கு புதிய வரி விதிப்பு முறைக்கு மாறுவதற்கு முக்கிய தடையாக உள்ளது.” என பவேஷ் ஷா சுட்டிக்காட்டியுள்ளார்.