
பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனத்தை விற்பனை செய்யும் திட்டம் ஏதும் இருக்கிறதா என்பது குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனம் இழப்பில் செயல்பட்டு வருவதால் அதை விற்பனை செய்யும் எண்ணம் மத்திய அரசுக்கு இருக்கிறதா என்பது குறித்துமக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய தகவல்தொடர்புத்துறை இணைஅமைச்சர் தேவ்சின் சவுகான் நேற்று எழுத்துப்பூர்வ பதில் அளித்தார் அவர் கூறியதாவது:
சுணக்கம் இல்லை
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் கடந்த 2020ம் ஆண்டு தொடக்கத்தில் விஆர்எஸ் விருப்ப ஓய்வு திட்டத்தை செயல்படுத்தியதால், நிறுவனம் தனது சேவையை வழங்குவதில் எந்த விதமான குறைபாடும், தாமதமும் இல்லை. பிஎஸ்என்எல் நிறுவனத்தில் தற்போது இருக்கும் ஊழியர்கள் எண்ணிக்கை போதுமான அளவு இருக்கிறது. ஆதலால் பிஎஸ்என்எல் நிறுவனத்தை விற்பனை செய்யப் போகிறோம் என்ற பரிசீலனையோ, ஆலோசனையோ, திட்டமோ அரசுக்குஇல்லை.
சொத்து மதிப்பு
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அசையா சொத்துக்கள் அதாவது கட்டிடங்கள், நிலங்கள், தொலைத்தொடர்பு கோபுரங்கள், தொலைத்தொடர்பு சாதனங்கள், தொலைத்தொடர்பு அல்லாத சாதனங்கள் என கடந்த 2021, மார்ச் 31வரை, ரூ.89,878 கோடிக்கு இருக்கிறது
2021, டிசம்பர் 31ம் தேதிக்குப்பின், அனைத்து இந்திய அளவில் பிஎஸ்என்எல் மொபைல் வாடிக்கையாளர்கள் பங்கு 9.5%, பிராண்ட்பேண்ட் வாடிக்கையாளர்கள் 15.40% இருக்கிறது.
விற்பனை திட்டம் ஏதும் இல்லை
பிஎஸ்என்எல் நிறுவனத்தை மறுசீரமைப்பு செய்ய கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய அரசு அனுமதியளித்தது. அதன்படிதான், 50வயதுக்கு மேற்பட்ட ஊழியர்கள் விஆர்எஸ் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. 4ஜி சேவைக்கான ஸ்பெக்ட்ராம் ஒதுக்கீடு செய்யப்பட்டது, பட்ஜெட்டிலும் நிதி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 2020-21ம் ஆண்டில் பிஎஸ்என்எல் நிறுவனம் லாபத்தை நோக்கி நகர்ந்துள்ளது.
ஆதலால் பிஎஸ்என்எல் நிறுவனத்தை விற்பனை செய்யும் திட்டம் என்ற பேச்சுக்கே இடமில்லை”
இவ்வாறு தேவ்சின் சவுகான் தெரிவித்தார்
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.