
கேரளாவில் பேருந்து டிக்கெட் கட்டணத்தை உயர்த்தக் கோரி, தனியார் பேருந்து உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை இன்று முதல்(24ம்தேதி) தொடங்கியுள்ளனர்.
7 ஆயிரம் பஸ்கள்
கேரளாவில் 7ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள் நேற்று நள்ளிரவு முதல் நிறுத்தப்பட்டதால் மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். கேரள அரசுப் போக்குவரத்தும் கூடுதலாக எந்தப்பேருந்து இயக்க முடியாது எனத் தெரிவித்துவிட்டதால், பேருந்து நிறுத்தங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது
மக்கள் சிரமம்
கடந்த 4 மாதங்களாக டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. ஆனால், கடந்த 2 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 80 காசுகள் உயர்ந்துள்ளது. அதிகரித்து வரும் டீசல் உயர்வைச் சமாளிக்க முடியாது என்பதால், பேருந்துக் கட்டணத்தை உயர்த்தக் கோரி தனியார் பஸ் உரிமையாளர்கள் கேரள அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இதுதொடர்பாக விடுத்த கோரிக்கை கேட்ட கேரள அரசு விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தது. மேலும் கொரோனா காலம் என்பதால், மக்கள் சிரமப்படக்கூடாது என்பதால் அப்போது வேலைநிறுத்தம் செய்வதை தனியார் பேருந்து உரிமையாளர்கள் தவிர்த்தனர்.
கோரிக்கை
இந்நிலையில் கோரிக்கை அளித்து 4 மாதங்கள் ஆகியும் கேரள அரசு பேருந்துக் கட்டணத்தை உயர்த்துவது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால், கடந்த இரு வாரங்களுக்கு முன் வேலைநிறுத்தம் தொடர்பாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் அரசிடம் நோட்டீஸ் அளித்தனர்.
கட்டண உயர்வு
அந்த நோட்டீஸ் அளித்தபின்னும் கேரள அரசு சார்பில், தனியார் பேருந்து உரிமையாளர்களுடன் பேச்சு நடத்தவில்லை. இதையடுத்து, நேற்று நள்ளிரவு முதல் தனியார் பேருந்து உரிமையாளர்கள் மாநிலம் முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏறக்குறைய 7ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் ஓடாததால் மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
தனியார் பேருந்து உரிமையாளர்களின் கோரிக்கையின்படி, குறைந்தபட்ச கட்டணமாக ரூ.12, மாணவர்களுக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.6, ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.1.10 நிர்ணயிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், இதுவரை அதற்கு தீர்வு இல்லை.
மாணவர்கள் நலன்
மாநில போக்குவரத்து துறைஅமைச்சர் ஆண்டனி ராஜ் கூறுகையில் “ மாநிலத்தில் பள்ளி,கல்லூரிகளுக்குத் தேர்வு நடப்பதால், அதைப் புரி்ந்துகொண்டு மாணவர்கள் நலன் கருதி பேருந்து உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார். ஆனால், அதற்கு பேருந்து உரிமையாளர்கள் தரப்பில் அமைச்சரின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டனர்.
ஆலோசனை
ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு, பேருந்துக்கட்டணத்தை உயர்த்துவது குறித்து கொள்கைரீதியாக முடிவு எடுத்துள்ளது. வாடகைக் கார், ஆட்டோ கட்டணம் உயர்த்துவது குறித்தும்ஆலோசித்துள்ளது ஆனால், எந்த முடிவையும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
இதன்படி குறைந்தபட்ச பேருந்துக் கட்டணம் ரூ.10, ஆட்டோவில்குறைந்தபட்ச கட்டணம் ரூ.30 அதன்பின் கிலோமீட்டர் ஒவ்வொன்றுக்கும் ரூ.15 என நிர்ணயிக்க ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.