
சர்வதேச சந்தையில் கிரிப்டோ கரன்சிகளான பிட்காயின், எத்திரியம் மதிப்பு திடீரென அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 1.70 லட்சம் கோடி டாலராக இருந்த கிரிப்டோகரன்சி மதிப்பு 1.87 லட்சம் கோடி டாலராக அதிகரித்துள்ளது. ஏறக்குறைய 9 சதவீதம் லாபம் ஈட்டியுள்ளது.
வர்த்தக அடிப்படையில் 4-ம் தேதி நிலவரப்படி 6872 கோடி டாலராக இருந்தது, தற்போது 9036 கோடி டாலராக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த கிரிப்டோகரன்சி சந்தையில் கடந்த 24 மணிநேரத்தில் வர்த்தகம் 13.44 சதவீதம் அதிகரித்துள்ளது, அதாவது 1221 கோடி டாலர்கள் அளவுக்கு வர்த்தகம் நடந்துள்ளது.
இதில் பிட்காயின் சந்தை மதிப்பு 9 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்திய மதிப்பின்படி, ஒரு பிட்காயின் மதிப்பு ரூ.32 லட்சத்து 33 ஆயிரத்து 214 ஆக அதிகரித்துள்ளது. கடந்த இரு நாட்களுக்கு முன்பு ரூ.29 லட்சமாக இருந்த நிலையில் ஏறக்குறைய ரூ.4 லட்சம் லாபமீட்டியுள்ளது. எத்திரியம் மதிப்பு 9.5 சதவீதம் அதிகரித்து ரூ.2 லட்சத்து 34 ஆயிரத்து 199 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன் எத்திரியம் மதிப்பு ரூ.2.13 லட்சமாக இருந்தது
கார்டனோ மதிப்பு 6 சதவீதம் அதிகரித்து ரூ.88.73 ஆகவும், அவலான்சே மதிப்பு 11% உயர்ந்து, ரூ.6,096 ஆக ஏற்றம்கண்டது. போல்காடாட் மதிப்பு 7% ஏற்றம் கண்டு ரூ.1,617 ஆகவும், லிட்காயின் மதிப்பு 6.7 சதவீதம் அதிகரித்து, ரூ.9,320 ஆகவும் உள்ளது.
கிரிப்டோகரன்சிக்களின் மதிப்பு சர்வதேச சந்தையில் என்னதான்உயர்ந்தாலும் இந்தியாவில் ஒருபோதும் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படாது என்பதை நிதித்துறை செயலாளர் விளக்கியுள்ளார். கிரிப்டோகரன்சிகளுக்குப் பதிலாகத்தான் ரிசர்வ் வங்கி சார்பி்ல் விரைவில் டிஜிட்டல் ரூபி வர இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் கிரிப்டோகரன்சி மூலம் செய்யும் முதலீடு, வருமானத்துக்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படும் என பட்ஜெட்டில் அரசு அறிவித்திருப்பதும் கிரிப்டோகரன்சி மீதான ஆர்வத்தை கட்டுப்படுத்தும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.