இந்தியாவில் உள்ள வங்கிகளுக்கு அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை விடப்பட்டு, வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டும் வங்கி சேவையானது விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது
வங்கி ஊழியர் சங்கங்களின் தொடர்ச்சியான கோரிக்கைகளுக்கு மத்தியில் கிட்டத்தட்ட ஓராண்டு முயற்சிகளுக்கு பலனளிக்கும் வகையில், இந்தியாவில் உள்ள வங்கிகளுக்கு அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை விடப்பட்டு, வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டும் வேலை நாளாக இருக்கும் நடைமுறை விரைவில் வரவுள்ளது.
இந்திய வங்கி நிர்வாகங்களின் பிரதிநிதித்துவ அமைப்பான, இந்திய வங்கிகள் சங்கத்துடன் (ஐபிஏ), வங்கி ஊழியர் சங்கங்கள் கடந்த மாதம் 28ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தியது. அந்த கூட்டத்தில், சனிக்கிழமைகள் விடுமுறை விடப்பட்டு ஐந்து நாட்கள் வங்கி சேவைக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அதனை இந்திய வங்கிகள் சங்கம் ஏற்றுக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன், இந்த கோரிக்கையை நிதி அமைச்சகத்தில் ஒப்புதலுக்கும் வங்கி நிர்வாகங்களின் பிரதிநிதித்துவ அமைப்பான, இந்திய வங்கிகள் சங்கம் அனுப்பி வைத்துள்ளது. இந்த கோரிக்கைக்கு மத்திய நிதி அமைச்சகமும் ஒப்புதல் அளித்தால், இனி வங்கிகள் வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே செயல்படும். 1ஆவது மற்றும் 3ஆவது சனிக்கிழமைகளில் வேலை செய்ய வேண்டியதில்லை. மாதத்தின் அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை விடப்படும். அதேசமயம், இதனை ஈடு செய்யும் பொருட்டும், வங்கிக் கிளைகளில் தினசரி வேலை நேரம் 45 நிமிடங்கள் நீட்டிக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தங்களது இந்த கோரிக்கையை நிதி அமைச்சகம் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளும் என வங்கி ஊழியர்கள் உறுதியாக நம்புகிறார்கள். நிதி அமைச்சகத்துடனான சில முறைசாரா பேச்சுக்களின் அடிப்படையில், வங்கிகள் சங்கத்தின் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்வதில் அரசாங்கத்திற்கு எந்த சிக்கல் இருக்காது என தெரிகிறது.
ராஜ்ய சபாவுக்கு வந்த மன்மோகன் சிங்... பாராட்டும் ஆம் ஆத்மி... வெட்கக்கேடு என விமர்சிக்கும் பாஜக!
இந்த ஆண்டின் தொடக்கத்தில் மார்ச் மாதம், அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. அதில், வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் ஐந்து நாள் வேலை செய்ய ஐபிஏ ஒப்புக்கொண்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், “காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பண பரிவர்த்தனைகள் மற்றும் மாலை 4 முதல் 4.30 மணி வரை பணம் அல்லாத பிற பரிவர்த்தனைகள் என மொத்த வேலை நேரத்தை ஒரு நாளைக்கு 40 நிமிடங்கள் அதிகரிக்கலாம்” எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வங்கிகளுக்கான ஐந்து நாள் வேலை வாரம் தொடர்பாக கடந்த காலங்களில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. ஆனால் இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை. எனவே, இந்த முறை வங்கி தொழிற்சங்கங்களின் கோரிக்கைக்கு நிதி அமைச்சகம் ஒப்புதல் அளிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.