
இந்திய எலெக்ட்ரிக் வாகனங்கள் சந்தையில் முன்னணி நிறுவனமாக ஏத்தர் எனர்ஜி இருக்கிறது. ஏத்தர் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 2016 வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. பின் 2020 ஆண்டு ஏத்தர் தனது 450X மற்றும் ஏத்தர் 450 பிளஸ் ஸ்கூட்டர் மாடல்களை அறிமுகம் செய்தது. இரு மாடல்களும் ஏத்தர் நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் ஸ்கூட்டர்கள் ஆகும்.
இந்த நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஏத்தர் நிறுவனம் புதிய ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய ஸ்கூட்டர் அதிவேகம் மட்டுமின்றி நீண்ட தூரம் பயணிக்க ஏதுவான ரேன்ஜ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்கூட்டரில் அளவில் பெரிய பேட்டரி பேக் வழங்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த ஆறு மாதங்களில் புதிய ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ஏத்தர் எனர்ஜி தற்போது விற்பனை செய்து வரும் ஏத்தர் 450X மாடலில் 2.9 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 80 கிலோமீட்டர் வேகத்திலும், முழு சார்ஜ் செய்தால் 85 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. சீரான நிலைகளில் இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 116 கிலோமீட்டர் வரை செல்லும் என ஏத்தர் தெரிவித்து உள்ளது.
விரைவில் அறிமுகமாக இருக்கும் புதிய ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 110 முதல் 115 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஏத்தர் நிறுவனத்திற்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட்ட ஓலா எஸ்1 ப்ரோ ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 181 கிலோமீட்டர் வரை செல்லும் என ஓலா எலெக்ட்ரிக் தெரிவித்து இருந்தது. எனினும், வாடிக்கையாளர்கள் இந்த ஸ்கூட்டர் 135 கிலோமீட்டர் வரை மட்டுமே செல்வதாக தெரிவித்து வருகின்றனர்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.