கும்மிடிப்பூண்டியில் பிரம்மாண்ட ரயில் சக்கர உற்பத்தி தொழிற்சாலை தொடங்கப்பட உள்ளது. இது குறித்த முழுமையான விவரங்களை பார்க்கலாம்.
உலகிலேயே அதிக ரயில்களை இயக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இதனால் ரயில்களின் பெட்டிகள், சக்கரங்கள் மற்றும் ரயிலுக்கு தேவையான உதிரி பாகங்களுக்கு தேவை அதிகம் உள்ளது. ரயில் பெட்டிகள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டாலும், ரயில் சக்கரங்களுக்கு இந்தியா வெளிநாடுகளை சார்ந்தே உள்ளது.
1960ம் ஆண்டில் இருந்து இங்கிலாந்து, செக் குடியரசு, பிரேசில், ருமேனியா, ஜப்பான், சீனா, உக்ரைன் மற்றும் ரஷ்யாவிலிருந்து லோகோமோட்டிவ்கள் மற்றும் கோச்சிங் ஸ்டாக் (LHB) க்கு தேவையான பல்வேறு வகையான சக்கரங்களை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. 2024-25 ஆம் ஆண்டில், சுமார் ரூ.900 கோடி மதிப்புள்ள சக்கரங்கள் சீனா மற்றும் ரஷ்யா, உக்ரைனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன, மேலும் 40,000 சக்கரங்கள் இந்தியாவின் ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட்டில் (SAஈள்) இருந்து பெறப்பட்டன.
தற்போது ரஷ்யா-உக்ரைன் போர் நெருக்கடி காரணமாக இப்போது அதிகளவு ரயில் சக்கரங்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்தியாவில் தொடர்ந்து வந்தே பாரத் உள்ளிட்ட அதிக வேக ரயில்கள் அறிமுகப்படுத்தப்படுவதால், 2026ம் ஆண்டுக்குள் ரயில் சக்கரங்களின் தேவை 2 லட்சமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2024-25ம் ஆண்டில் உள்நாட்டு உற்பத்தி திறன் மூல்ம் 75,000 சக்கரங்களே உற்பத்தி செய்யப்பட்டன. இந்நிலையில், ரயில் சக்கரங்களுக்கு வெளிநாடுகளை சார்ந்து இருக்காமல் உள்நாட்டில் உற்பத்தியை அதிகரிக்க இந்திய ரயில்வே திட்டமிட்டது. அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் சென்னையை அடுத்த கும்மிடிப்பூண்டியில் பிரம்மாண்டமான ரயில் சக்கர உற்பத்தி தொழிற்சாலை அமைய உள்ளது.
ராமகிருஷ்ணா ஃபோர்கிங்ஸ் லிமிடெட் (RKFL) மற்றும் டிடகார் ரயில் சிஸ்டம்ஸ் லிமிடெட் (TWL)ஆகிய நிறுவனங்கள் கூட்டமைப்பில் கும்மிடிப்பூண்டி ரயில் சக்கர உற்பத்தி ஆலை அமைகிறது. இந்த பிரம்மாண்ட தொழிற்சாலை அமைப்பதற்காக 72.75 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியுள்ளதாகவும், கட்டுமான பணிகள் விரைவாக நடந்து வருவதாகவும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
கும்மிடிப்பூண்டி ரயில் தொழிற்சாலைக்கு முதல் கட்டமாக மொத்தம் ரூ.650 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாவும், 2.5 லட்சம் சக்கரங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இந்த ஆலை இருக்கும் எனவும் அதில் 1.70 லட்சம் சக்கரங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கும்மிடிப்பூண்டி ரயில் தொழிற்சாலை வந்தே பாரத் ரயில் சக்கரங்களை அதிக அளவில் உற்பத்தி செய்யும் என்றும் இந்த ஆலை மார்ச் அல்லது இன்னும் சில மாதங்களில் செயல்பாட்டுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.