
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தியிருக்கலாம் என்ற செய்தியை வரவேற்றுள்ளார். இது உண்மையானால் நல்ல முன்னேற்றமாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். அமெரிக்கா இந்திய பொருட்களுக்கு கடந்த ஆகஸ்ட் 1 முதல் 25% வரி விதித்துள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் எரிசக்தி தொடர்பான ரஷ்ய உடன்பாடுகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதத்தின் நடுப்பகுதியில், ரஷ்யாவுடன் எண்ணெய் வர்த்தகம் தொடரும் நாடுகளுக்கு 100% வரி விதிக்கப்படும் எனவும் டிரம்ப் எச்சரித்திருந்தார்.
இந்தியாவின் விளக்கம்
இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், நமது எரிசக்தி கொள்முதல் முடிவுகள் சந்தை நிலைமைகள் மற்றும் தேசிய நலன்களை பொருத்தே அமையும் என்றும் எந்த அரசு உத்தரவும் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை நிறுத்தவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
PSU எண்ணெய் நிறுவனங்கள் ஆர்டர் நிறுத்தம்
ஐஓசி, பிபிசிஎல், எச்பிசிஎல் மற்றும் எம்ஆர்பிஎல் போன்ற அரசு நிறுவனங்கள், சமீபத்தில் ரஷ்ய எண்ணெய் கொள்முதல் ஒப்பந்தங்களை நிறுத்தியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது அரசியல் காரணமாக அல்லாது வணிக ரீதியாகவே எடுத்த முடிவாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஏன் ரஷ்ய எண்ணெய் கொள்முதல் நிறுத்தப்பட்டது?
ரஷ்ய எண்ணெய் மீது கிடைக்கும் தள்ளுபடி கடந்த 2022ம் ஆண்டு முதலான குறைந்த அளவில் தான் தற்போது உள்ளது. இத்துடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டுப்பாடுகள் மற்றும் பரிவர்த்தனை முறைகளில் ஏற்பட்ட தடைகள், கொள்முதல் செயல்முறைகளை சிக்கலாக்கியுள்ளன. இந்திய இறக்குமதி நிறுவனங்கள் தற்போது மத்திய கிழக்கு மற்றும் மேற்குத் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வரும் எண்ணெய் வகைகளை (அபுதாபியின் கச்சா எண்ணெய்) தேர்வு செய்யத் தொடங்கியுள்ளன.
இது மோடியின் ராஜதந்திரமா?!
உலகின் மிகப்பெரிய எண்ணெய் இறக்குமதி நாடுகளில் ஒன்றான இந்தியா, தற்போதைய சர்வதேச சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு தனது எரிசக்தி மூலோபாயத்தை மெல்ல மெல்ல மாற்றி அமைத்து வருகிறது. வர்த்தக அழுத்தங்கள், சலுகை குறைபாடுகள் மற்றும் நிதி சிக்கல்கள், இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணமாக உள்ளன. இது மோடியின் ராஜந்திரம் என பாஜகவினர் பேசி வருகின்றனர்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.