
கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் சுற்றுலாத்துறையில் 2.15 கோடி பேர் வேலையிழந்தனர் என்று மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி தெரிவித்தார்
கடந்த 2020ம் ஆண்டு கொரோனா தொற்று பரவியபோது, நாடுமுழுவதும் ஊரடங்கு கொண்டுவரப்பட்டது. இதனால் மக்கள் எந்தஇடத்துக்கும் செல்லமுடியாமல் தவித்தனர், சுற்றுலாத்தளங்கள் அனைத்தும் மூடப்பட்டு மக்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த பிரச்சினையால் கோடிக்கணக்கானோர் வேலையிழந்ததாக செய்திகள் வெளியாகின.
அதுகுறித்த கேள்விக்கு மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி நேற்று மக்களவையில் கேள்விநேரத்தில் பதில் அளித்துப் பேசியதாவது:
கொரோனா சுற்றுலாத்துறையில் ஏற்படுத்திய பாதிப்புக் குறித்து ஆய்வு நடத்தினோம்.அந்த ஆய்வில் கொரோனா முதல் அலையில் 1.45 கோடிபேர் வேலையிழந்தனர், 2-வதுஅலையில் 52 லட்சம் பேர் வேலையிழந்தனர் 3-வது அலையில் 18 லட்சம் பேர் வேலையிழந்தனர்
நாட்டின் சுற்றுலாத்துறையில் 3.80 கோடிபேர் நேரடியாக வேலைவாய்ப்புப் பெற்றிருந்தார்கள்.ஆனால், கொரோனாவில் ஏற்பட்ட 3 அலையில் இந்தத் துறை மோசமாகப் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்பு இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் சுற்றுலாத்துறையில் இருந்தது
இந்தியாவுக்கு சுற்றுலாவுக்காக வெளிநாட்டினர் வருவது முதல் அலையில் 93% குறைந்தது, 2-வது அலையில் 79% சரிந்தது, 3-வது அலையில் 64% வீழ்ச்சி அடைந்தது.
மத்திய அரசு தடுப்பூசி திட்டத்தை அறிமுகம் செய்து, 180 கோடி டோஸ்களை செலுத்தியதையடுத்து, சுற்றுலாத்துறை தற்போது மீட்சியடைந்து வருகிறது. சுற்றுலா மற்றும் சுற்றுலாத் தொடர்புடைய தொழில் செய்வோருக்கு வட்டியில்லாமல் ரூ.10லட்சம்வரை கடன் வழங்கப்படுகிறது. சுற்றுலா வழிகாட்டிகளுக்கு ரூ.ஒரு லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.
ஆதலால், அனைத்து மாநில அரசுகளும் சுற்றுலாத்துறையை மேம்படுத்த என்னவிதமான நடவடிக்கை எடுக்கமுடியுமோ எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
பிரதமர் மோடியின் அரசு சுற்றுலாத்துறையே மேம்படுத்தஎடுத்த நடவடிக்கையால், கடந்த 2013ம்ஆண்டு 52-வது தரவரிசையில் இருந்தஇந்தியா, 2019ம் ஆண்டில் 32-வது இடத்துக்கு முன்னேறியது.
சுற்றுலாப்பயணிகள் வருகையை ஊக்குவிக்க, முதலில் வரும் 5 லட்சம் பேருக்கு விசா கட்டணம் இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொடங்கியது முதல் 20211, மார்ச் 7ம் தேதிவரை 51,960 பேருக்கு வழக்கமான முறையில் விசாவும், 1.57 லட்சம் பேருக்கு இ-விசாவும் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கிஷன் ரெட்டி தெரிவித்தார்
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.