வேளாண் துறையை கைதூக்கிவிடுமா மத்திய பட்ஜெட்? விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறியதா?

By manimegalai aFirst Published Feb 1, 2022, 3:39 PM IST
Highlights

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2022-23ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் வேளாண்துறை மற்றும் விவசாயிகளின் முன்னேற்றத்தை மையப்படுத்தி திட்டங்கள், நிதிஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளன என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2022-23ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் வேளாண்துறை மற்றும் விவசாயிகளின் முன்னேற்றத்தை மையப்படுத்தி திட்டங்கள், நிதிஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளன என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

நாட்டின் முதுகெலும்பாக இருப்பது வேளாண் துறையும், விவசாயிகளும்தான். கொரோனா பெருந்தொற்று காலத்தில் அனைத்து துறைகளும் முடங்கிய நிலையில்கூட வேளாண் துறை மட்டும்தான் சுணக்கம்இல்லாமல் செயல்பட்டது. அதனால்தான் ஒவ்வொரு ஆண்டும் வேளாண்துறைக்கு அதிகமான முக்கியத்துவம் அளி்க்கப்பட்டு, பட்ஜெட்டில் அதிக நிதியும், வேளாண் பொருட்கள் கொள்முதலுக்கான நிதியளவும் அதிகரிக்கப்படுகிறது.

வரும் 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் வேளாண் பொருட்களுக்கான கொள்முதலுக்காகவும், குறைந்தபட்ச ஆதாரவிலைக்காகவும் ரூ.2.37 லட்சம் கோடி ஒதுக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

 கடந்த 2014-ம் ஆண்டில் கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.33,874 கோடி வழங்கப்பட்ட நிலையில் இது கடந்த 2020-21ம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ.75 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் பயன்பெறும் விவசாயிகளின்எண்ணிக்கையும் 45லட்சத்துக்கு மேல்அதிகரித்துள்ளது

நெல்லுக்கு வழங்கப்படும் ஆதரவு விலை 2014ம் ஆண்டு ரூ.63 ஆயிரம் கோடியாக இருந்த நிலையில் இது ரூ.1.72 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. பயன்பெறும் விவசாயிகள் எண்ணிக்கையும் 1.24 கோடியிலிருந்து 1.54 கோடியாக அதிகரித்துள்ளனர்.

நபார்டு வங்கி மூலம் குறு நீர்பாசன நிதி என்ற பெயரில் கடந்த ஆண்டு பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு அதற்கு ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. வரும் பட்ஜெட்டில் கூடுதலாக ரூ.5ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

வேளாண் பொருட்களுக்கு மதிப்புகூட்டப்பட்ட பொருட்கள் ஏற்றுமதி, விற்பனைக்காக “ஆப்ரேஷன் க்ரீன் ஸ்கீம்” என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு அதில் வெங்காயம், தக்காளி , உருளைக்கிழங்கு மட்டும் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் கூடுதலாக 22 விளைபொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன

2022-23 ம்ஆண்டை சர்வதேச எண்ணெய் வித்துக்கள் ஆண்டாக நிதியமைச்சர் அறிவித்துள்ளார். வரும் ஆண்டில் வெளிநாடுகளில் இருந்து எண்ணெய் வித்துக்களை இறக்குமதி செய்வதைக் குறைத்து உள்நாட்டிலேயே அதை பயிர் செய்ய ஊக்கம்அளிக்கப்படும். 
விவசாயிகளுக்கு வருமானத்தை பெருக்கவும், நிலையானஉற்பத்தியை அதிகரிக்கவும் ரசாயனம்இல்லாத இயற்கை வேளாண் திட்டம் ஊக்கப்படுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

அதுமட்டுமல்லாமல், வேளாண் நிலத்தை அளவிடவும், பூச்சி கொல்லிகள் தெளிக்கவும் கிஷான் ட்ரோன்களைப் பயன்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. வேளாண்துறையில் நிலம் குறித்த ஆவணங்கள் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

மத்தியப்பிரதேசத்தில் உள்ள கென் ஆற்றையும், உ.பியில் உள்ள பெட்வா ஆற்றையும் இணைக்கும் திட்டம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இதற்காக ரூ.44 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 90ஆயிரம் விவசாயிகள் பயன்பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் மட்டுமல்லாமல் காவிரி-பெண்ணாறு இணைப்பு உள்ளிட்ட 5 திட்டங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன

கிராமங்களில் தொடங்கப்படும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஊக்கம் அளிக்கப்படும். விவசாயிகள் காடு வளர்ப்பையே வேளாண்மையாகக் கொண்டு செயல்படும்போது அவர்களுக்கு ஊக்கத்தொகையையும், நிதியுதவியும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் கோரிக்கை நிறைவேறியதா

வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த ஓர் ஆண்டாக டெல்லியின் புறநகரில் போராடிய விவசாயிகள் வைத்த முக்கிய கோரிக்கையில் ஒன்று குறைந்தபட்ச ஆதார விலையை உறுதிசெய்ய சட்டம் கொண்டுவருவதாகும். ஆனால், இந்த பட்ஜெட்டில் அந்த அறிவிப்பு ஏதும் இல்லை. விவசாயிகளின் வருமானம் 2022ம் ஆண்டுக்குள் இருமடங்காகஉயர்த்தப்படும் என பிரதமர் மோடி வாக்குறுதியளித்திருந்தார். அதை செயல்படுத்தும் திட்டம், அறிவிப்பு ஏதுமில்லை. 

5 மாநிலத் தேர்தலில் உ.பி., பஞ்சாப்பில் விவசாயிகள் அதிகம் என்பதால் அவர்களை திருப்திபடுத்தும் வகையில் அறிவிப்புகள் வரும் எந எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதுபோன்ற அறிவிப்புகள் ஏதுமில்லை. 

ஒட்டுமொத்தத்தில் விவசாயிகளுக்கும், வேளாண்மைக்கும் உகந்த பட்ஜெட்டாக கூறப்பட்டாலும், விவசாயிகள் தரப்பிலிருந்து எந்தவிதமான ஆதரவுக் குரலும் இந்த பட்ஜெட்டுக்கு இல்லை.
 

click me!