நெக்ஸான் இவி மின்சார கார்களின் விலையை டாடா நிறுவனம் குறைத்துள்ளதோடு மைலேஜ்களில் சில மாற்றங்கள் செய்துள்ளதால் வாடிக்கையாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
நெக்ஸான் இவி மின்சார கார்களின் விலையை டாடா நிறுவனம் குறைத்துள்ளதோடு மைலேஜ்களில் சில மாற்றங்கள் செய்துள்ளதால் வாடிக்கையாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர். டாடா நிறுவனத்தின் மிக பிரபலமான கார்களில் ஒன்றான டாடா நெக்ஸான் இவி மின்சார கார்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, டாடா நெக்ஸான் இவி ப்ரைம் எலெக்ட்ரிக் காரின் பேஸ் வேரியண்ட்டான XM வேரியண்ட்டின் விலை 50 ஆயிரம் ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல் XZ+ வேரியண்ட்டின் விலை 31 ஆயிரம் ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் எலெக்ட்ரிக் காரின் அனைத்து வேரியண்ட்களின் விலையும் 85 ஆயிரம் ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஜன.28 அன்று BMW X1 கார் இந்தியாவில் அறிமுகம்... கார் பற்றிய சில விவரங்கள் இதோ!!
இந்த விலை குறைப்புக்கு பின் டாடா நெக்ஸான் இவி ப்ரைம் எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 14.49 லட்ச ரூபாய். டாப் வேரியண்ட்டின் விலை 16.99 லட்ச ரூபாய். டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் எலெக்ட்ரிக் காரின் 3.3 kW சார்ஜர் மாடல் 16.49 லட்சம் - 18.49 லட்சம் ரூபாய் வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்படும். டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் எலெக்ட்ரிக் காரின் 7.2 kW சார்ஜர் மாடல், 16.99 லட்சம் - 18.99 லட்சம் ரூபாய் வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்படும். மேலே கொடுக்கப்பட்டுள்ள விலைகள் எக்ஸ் ஷோரூம் விலையாகும். இதேபோல் மைலேஜ்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதாவது, இதற்கு முன்பு டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் எலெக்ட்ரிக் காரின் ரேஞ்ச் 437 கிலோ மீட்டர்களாக இருந்த நிலையில் தற்போது அது 453 கிலோ மீட்டர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஒற்றை சார்ஜில் 320 கிமீ செல்லும் Citroen eC3 மின்சார SUV கார்... ஜன.22 முதல் தொடங்குகிறது முன்பதிவு!!
இந்த புதிய நெக்ஸான் இவி மின்சார கார்கள் ஜன.25 முதல் விற்பனைக்கு வர உள்ளது. மேலும் மைலேஜ் அதிகரிக்கும் அப்டேட்டை ஏற்கனவே நெக்ஸான் இவி மின்சார காரை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களும் பெற முடியும் என கூறப்படுகிறது. பிப்.15-லிருந்து, சாஃப்ட்வேர் அப்டேட் மூலம் இதனை பெற முடியும் என கூறப்படுகிறது. முன்னதாக மஹிந்திரா நிறுவனம் நெக்ஸான் இவி மின்சார கார்களுக்கு போட்டியாக, மஹிந்திரா எக்ஸ்யூவி 400 மின்சார கார்களை அறிமுகப்படுத்தியது. மேலும் அதன் விலை 15.99 லட்சம் ரூபாய் எனவும் டாப் வேரியண்ட்டின் விலை 18.99 லட்சம் ரூபாய் எனவும் நிர்ணயிக்கப்பட்டது. இந்த போட்டியை சமாளிக்கவே டாடா நிறுவனம் விலைக்குறைப்பு யுக்தியை கையில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.