
இந்திய சந்தையில் தனது தயாரிப்பு வரிசையை விரிவுபடுத்த நிசான் இந்தியா தயாராகி வருகிறது. அந்த முயற்சியின் ஒரு பகுதியாக, ‘கிராவிட் (நிசான் கிராவைட்) என்ற புதிய காம்பாக்ட் MPV-யின் பெயரை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த 7 இருக்கைகள் கொண்ட காரை 2026 ஜனவரியில் இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், மார்ச் 2026-க்குள் ஷோரூம்களில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிசானின் இந்திய வணிக வளர்ச்சிக்கான புதிய உத்தியின் முக்கிய மாடலாக இந்த கார் பார்க்கப்படுகிறது.
தற்போது இந்தியாவில் நிசான் ‘மேக்னைட்’ என்ற ஒரே மாடலுடன் மட்டுமே விற்பனையில் உள்ளது. ஆனால், இனி அந்த நிலை மாறவுள்ளது. ‘கிராவிட்’ MPV-க்கு பிறகு, ‘டெக்டான்’ (Tekton) என்ற புதிய SUV-யையும் நிசான் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், 2027-ல் ஒரு பிரீமியம் 7-சீட்டர் SUV-யையும் சந்தையில் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இந்த மூன்று மாதங்களும் குறுகிய கால இடைவெளியில் அறிமுகமாகும் என்பதால், நிசானின் இந்திய வருகை வேகமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘கிராவிட்’ காரின் முழு வடிவம் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால், வெளியிடப்பட்ட டீசர்களின் அடிப்படையில், இது நிசானின் புதிய உலகளாவிய டிசைன் மொழியில் உருவாகியுள்ளது. முன்பக்கத்தில் குரோம் அலங்காரத்துடன் கூடிய புதிய கிரில், பெரிய நிசான் லோகோ, நவீன ஹெட்லெம்ப்கள் மற்றும் ஹூட் ஸ்கூப் போன்ற போனெட் வடிவமைப்புகள் இடம்பெற்றுள்ளன. மொத்தத்தில், இந்த கார் மஸ்குலர் மற்றும் பிரீமியம் தோற்றத்துடன் இருக்கும்.
இன்டீரியரில், ‘கிராவிட்’ அதிக வசதிகளுடன் வருமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த MPV 5, 6 மற்றும் 7-சீட்டர் அமைப்புகளில் கிடைக்கும். 7-இன்ச் TFT இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 8-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜிங், கூல்டு ஸ்டோரேஜ் மற்றும் இரண்டாம் வரிசை இருக்கைகளுக்கு ஸ்லைடு, ரிக்லைன் வசதிகள் போன்ற அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
இன்ஜின் விஷயத்தில், நிசான் கிராவிட்டில் 1.0 லிட்டர், 3-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படும். இது 72 hp பவர் மற்றும் 96 Nm டார்க் உருவாக்கும். 5-ஸ்பீட் மேனுவல் மற்றும் AMT கியர்பாக்ஸ் விருப்பங்களுடன் வரும் இந்த கார், இந்திய சாலைகளுக்கேற்ற வகையில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் வழங்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.