மின்சார வாகனங்களை 21 நிமிடத்தில் 80% சார்ஜ் செய்யும் ஹூண்டாய் அல்ட்ரா-ஃபாஸ்ட் சார்ஜர்!

By SG BalanFirst Published Feb 17, 2024, 11:56 AM IST
Highlights

இந்த அல்ட்ரா-ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையங்கள் மின்சார வாகனங்களை விரைவாக சார்ஜ் செய்ய உதவும். Hyundai IONIQ 5 காரை இந்த சார்ஜர்களைப் பயன்படுத்தி வெறும் 21 நிமிடங்களில் 10% முதல் 80% வரை சார்ஜ் செய்யலாம்.

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் மின்சார வாகனங்களை நாடு முழுவதும் பரவலான பயன்பாட்டுக்குக் கொண்டுவர ஒரு முக்கிய நடவடிக்கையை எடுத்து வருகிறது.

ஹூண்டாய் நிறுவனம் சமீபத்தில் தனது அதிவேக EV சார்ஜிங் நெட்வொர்க்கை விரிவுபடுத்தி இருக்கிறது. பல்வேறு நகரங்கள் மற்றும் முக்கிய நெடுஞ்சாலைகளில் 11 புதிய சார்ஜிங் நிலையங்களை அமைத்துள்ளது.

எந்தெந்த நகரங்களில் பயன்படுத்தலாம்?

இந்த ஆறு புதிய சார்ஜிங் நிலையங்கள் மும்பை, புனே, அகமதாபாத், ஹைதராபாத், குருகிராம் மற்றும் பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களில் அமைந்துள்ளன. மற்ற ஐந்து நிலையங்களும் தில்லி-சண்டிகர், டெல்லி-ஜெய்ப்பூர், ஹைதராபாத்-விஜயவாடா, மும்பை-சூரத் மற்றும் மும்பை-நாசிக் போன்ற முக்கிய நெடுஞ்சாலைகளில் உள்ளன.

கிரிப்டோ கரன்சிக்கு மதிப்பே கிடையாது... அதை நாணயமாக ஏற்க முடியாது: ரிசர்வ் வங்கி

அல்ட்ரா-ஃபாஸ்ட் சார்ஜரின் சிறப்பு என்ன?

மின்சார வாகனம் வைத்திருப்பவர்கள் நகரங்களுக்குள் பயணிக்கவும் தொலைதூரப் பயணங்களிலும் பயன்படும் வகையில் இந்த சார்ஜிங் நிலையங்கள் அமைந்தள்ளன. இந்த சார்ஜிங் மையங்கள் வசதியான சார்ஜிங் அனுபவம் கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை பெரும்பாலும் 24 மணிநேரமும் செயல்படக்கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அல்ட்ரா-ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையங்கள் வாடிக்கையாளர்கள் தங்கள் மின்சார வாகனங்களை விரைவாக சார்ஜ் செய்ய உதவும். உதாரணமாக, ஹூண்டாய் நிறுவனத்தின் மின்சார வாகன மாடல்களில் ஒன்றான Hyundai IONIQ 5 காரை இந்த சார்ஜர்களைப் பயன்படுத்தி வெறும் 21 நிமிடங்களில் 10% முதல் 80% வரை சார்ஜ் செய்யலாம்.

எப்படி பயன்படுத்துவது?

வாடிக்கையாளர்கள் MyHyundai மொபைல் அப்ளிகேஷனை பயன்படுத்தி அருகில் உள்ள சார்ஜிங் நிலையங்களைக் கண்டறியலாம். அவற்றிற்குச் செல்லலாம், சார்ஜிங் ஸ்லாட்டுகளை முன்பதிவு செய்யலாம். ஆன்லைன் பேமெண்ட் முறைகளிஙல் பணம் செலுத்தலாம்.

ஹூண்டாய் தனது அல்ட்ரா-ஃபாஸ்ட் சார்ஜிங் நெட்வொர்க்கை 2024ஆம் ஆண்டில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட புதிய இடங்களுக்கு விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு அரசுடன் செய்துள்ள ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, 2027ஆம் ஆண்டுக்குள் 100 சார்ஜிங் நிலையங்களை நிறுவ ஹூண்டாய் இலக்கு வைத்துள்ளது.

வானிலை செயற்கைக்கோளுடன் இன்று விண்ணில் ஏவப்படுகிறது ஜி.எஸ்.எல்.வி. எப் 14 ராக்கெட்

click me!