இந்த குரு பெயர்ச்சியால் மீன ராசிக்காரர்களின் வாழ்க்கை எப்படி எல்லாம் மாறப்போகிறது என்று பார்க்கலாம்.
ஜோதிடத்தில் சில கிரகங்களின் பெயர்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதிலும் சனி பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி, குரு பெயர்ச்சி ஆகியவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. குறிப்பாக குரு பெயர்ச்சியால் சில ராசிக்கார்கள் திடீர் யோகம் ஏற்படும். இப்படி பலரின் வாழ்க்கை குரு பெயர்ச்சியால் மாறி இருக்கிறது. அந்த வகையில் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவான், மே 1 முதல் ரிஷப ராசிக்கு செல்கிறார். இந்த குரு பெயர்ச்சியால் மீன ராசிக்காரர்களின் வாழ்க்கை எப்படி எல்லாம் மாறப்போகிறது என்று பார்க்கலாம்.
இதுவரை உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் அமர்ந்து ஓரளவு செல்வாக்கையும், செல்வ செழிப்பையும் தந்த குருபகவான், தற்போது உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் மறைகிறார். 3-ம் இடத்து குரு முடக்கிவிடுமே என்று கவலைப்பட வேண்டாம். உங்கள் ராசிநாதன் குரு என்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். பணவரவு தொடரும். விலை உயர்ந்த ஆடை ஆபரணங்களை வாங்குவீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்.
புது வாகனம், வீடு வாங்கும் யோகம் அமையும். கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். உங்களிடம் மறைந்திருந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். எதையும் திட்டமிட்டு செய்வது நல்லது. திட்டமிடாமல் செய்யும் விஷயங்களால் வீண் அலைச்சல் ஏற்படும். சின்ன சின்ன வேலைகளை கூட முதல் முயற்சியிலேயே முடிக்க முடியாமல் போராடி தான் முடிக்க வேண்டி இருக்கும். மற்றவர்களின் பேச்சை கேட்டு அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம்.
மாமியார், மாமனார் வகையில் மனக்கசப்புகள் வந்து பொகும். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். சமூகத்தில் உங்களின் மதிப்பும் மரியாதையும் உயரும். சிலர் புதிதாக முதலீடு செய்து புது தொழில் தொடங்க வாய்ப்புண்டு. செலவுகளும், பயணங்களும் அதிகரிக்கும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழந்து விடாதீர்கள். பிரச்சனைகளை பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும்.
மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை. தினசரி நடைபயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்வது அவசியம். பணம் கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. வெற்றுத்தாளில் கையெழுத்திட்டு சிக்கி கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் பழைய தவறுகள் நிகழ்ந்துவிடாத வண்ணம் பார்த்துக் கொள்வீர்கள். உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு தகுந்தாற் போல் ஒருவர் பங்குதாரராக அறிமுகமாவார். உத்தியோகத்தில் இருந்த அலட்சிய போக்கு மாறும். மூத்த அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். கேட்ட இடத்திற்கு பணியிட மாற்றம் கிடைக்கும். உங்கள் திறமைக்கு பாராட்டு கிடைக்கும். இந்த குரு மாற்றம் சின்ன சின்ன அலைச்சலையும், செலவுகளையும் தந்தாலும் உங்களை தொடர்ந்து வெற்றி பாதையில் பயணிக்க உதவும்.