கால்நடைகளை வெகுவாக தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தும் இந்த நோயை பற்றி தெரியுமா?

 |  First Published Jan 26, 2018, 12:39 PM IST
You should know how to control there diseases



 

** கோமாரி நோய்

Tap to resize

Latest Videos

‘கால்கானை வாய்க்கானை’ என்றும், ‘கால் சப்பை வாய்ச் சப்பை’ என்றும் இந்நோய்க்கு வேறு பெயர்களும் உண்டு. இவ்வைரஸ், தட்பவெப்ப நிலையைத் தாங்கி அதிக நாள் உயிருடன் வாழும் தன்மை உடையது. 

இந்நோய்க் கிருமியில் 7 வகைகள் உள்ளன. அவற்றுள் 4 வகைகள் நம் நாட்டில் உள்ளன. ஒவ்வொன்றும் நோய் ஏற்படுத்தும் விதத்தில் வேறுபட்டவை. இதனால் இந்நோயைத் தடுக்க, தகுந்த தடுப்பூசி மருந்து இல்லை. 

தற்போதுள்ள தடுப்பூசி மருந்து முழு நோய் எதிர்ப்புத் திறனை அளிப்பதில்லை. நோய் எதிர்ப்புத் திறன் காலமும் நான்கு மாதம் தான். எனவே, நான்கு மாதத்திற்கு ஒரு முறை தடுப்பூசி போடவேண்டும்.

உயிர் இழப்பு இல்லையென்றாலும் இந்நோயினால் பாதிப்பு அதிகம். பாதிக்கப்பட்ட மாடுகளின் பொருளாதாரக் குணங்கள் பாதிக்கப்படுவதால் மாடுகள் பயனற்றுப் போகின்றன. இந்நோய், தீவனம், நீர், காற்று, நெருங்கிப் பழகுவதாலும் பரவுகிறது. காற்று வீசும் திசையில் காற்றுத் துகள்கள் மூலம் சுமார் 300 கிலோ மீட்டர் வரை இந்நோய் பரவும்.

** நோய் அறிகுறிகள்

1.. பொதுவாகக் கோடைக்காலத்தில் இந்நோய் அதிகம் பரவுகிறது. ஆரம்பத்தில் காய்ச்சல் 41 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.

2.. வாயிலிருந்து சளி போன்ற நுரையுடன் கெட்டியான உமிழ்நீர், கயிறு போன்று தொங்கிக் கொண்டிருக்கும். நோய் கண்ட மாடுகள், தொடர்ந்து வாயைச் சப்பிய வண்ணம் காணப்படும்.

3.. வாயைத் திறந்து பார்த்தால் நாக்கின் மேல்புறம், மேலண்ணம், வாயின் உட்பகுதி முதலியவற்றில் மெல்லிய, நீர் கோர்த்த கொப்பளங்கள் காணப்படும். ஓரிரு நாட்களில் ஆங்காங்கே கொப்பளங்கள் தொங்கிய வண்ணம் இருக்கும். இதனால் தீவனம் உட்கொள்ள முடியாது.

4.. கால்களில் குளம்புகளுக்கிடையே உள்ள தோலிலும், குளம்புகளுக்குச் சற்று மேற்புறமுள்ள தோலிலும் புண்கள் உண்டாகும். வலி காரணமாக மாடுகள் அடியெடுத்து வைக்க அஞ்சும். குளம்புகள் நாளடைவில் கழன்று விழ நேரிடலாம்.

5.. நோய் கண்ட பசுக்களில் பால் அருந்தும் கன்றுகள் இறந்துபோகும்.

6.. மடி, காம்பு போன்றவற்றில் கொப்பளம் தோன்றி பின்பு புண் ஏற்பட்டு, பால் கறக்க இயலாது. மடிநோய் ஏற்பட வாய்ப்புள்ளது.

** தடுப்பும் பாதுகாப்பும்

1.. கன்றுகளுக்கு 8 வார வயதில் முதல் கோமாரி நோய்த் தடுப்பூசியும், 12 வார வயதில் இரண்டாவது தடுப்பூசியும், 16 வார வயதில் மூன்றாவது தடுப்பூசியும் பின்பு 4 மாதத்திற்கு ஒரு முறை கோமாரி நோய்த்தடுப்பூசியையும் தவறாமல் போட வேண்டும். நோய் ஏற்படும் காலத்திற்கு சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு தடுப்பூசி போடவேண்டும்.

2.. பால் கறப்பவர், வெளியிலிருந்து வருபவராக இருந்தால் அவர் மூலம் இந்நோய் பண்ணைக்குள் வர வாய்ப்புள்ளது.

3.. மற்ற மாடுகள், பண்ணைக்கு உள்ளே எந்தக் காரணம் கொண்டும் வரக்கூடாது. அதே போல், பண்ணை மாடுகள் வெளியில் செல்லக்கூடாது. பார்வையாளர்கள் மற்றும் வாகனங்கள் உள்ளே வரக்கூடாது. இதை நன்கு கண்காணிக்க வேண்டும்.

4.. சோடியம் ஹைட்ராக்சைடு மற்றும் பொட்டாசியம் ஹைக்ட்ராக்சைடு கிருமி நாசினி மருந்தை 3-4 சதம் கரைசலாக்கி தரையில் தெளிக்கவேண்டும். சோடியம் கார்பனேட் பவுடரை தரையில் தூவலாம். பீளீச்சிங் பவுடரை தரையில் தூவி கிருமியின் எண்ணிக்கையைக் குறைக்கலாம்.

5.. நோய் ஏற்பட்டால் நோயுற்ற மாடுகளை ஒதுக்குப்புறமாக வைத்து சிகிச்கையளிக்கவேண்டும். பாதிக்காத மாடுகளோடு தொடர்பு இருக்கக்கூடாது.

6.. நோயுற்ற மாட்டின் பாலை, கன்றுகள் அருந்த அனுமதிக்கூடாது. இந்நோயின் அறிகுறிகள் தென்பட்டால் கால்நடை மருத்துவரை அணுகி சிகிச்சை பெறவேண்டும்.

7.. நோய்க்கிருமி தொழுவத்தில் அதிக நாள் உயிருடன் இருக்கும் திறன் கொண்டமையால், கிருமி நாசினி மருந்து கொண்டு சுத்தம் செய்வதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும்.

8.. நோய்ப்பரவியுள்ள சமயத்தில், மாடுகளை சந்தையில் வாங்கவோ, விற்கவோ கொண்டு செல்லக்கூடாது.

click me!