1.. கன்று வீச்சுநோய்
இந்நோய் ஐ.பி.ஆர் என்ற நச்சுயிரி (வைரஸ்) நுண்கிருமியால் ஏற்படும் நோயாகும். இந்நோய்க் கிருமி கருவுற்ற கறவை மாட்டின் கர்பப்பையைத் தாக்கி கருச்சிதைவை ஏற்படுத்துகிறது. பொதுவாக 4-7 மாத வயதுள்ள கருவைத் தாக்கி கருச்சிதைவை ஏற்படுத்தும் தன்மையுடையது.
கருச்சிதைவிற்குப் பின் கருத்தரியாமையை ஏற்படுத்துகிறது. இதனால் அதிக பொருளாதாரச் சேதம் ஏற்படுகிறது. இந்நோய்க் கிருமி விந்து மூலமாக கறவை மாட்டிற்கு பரவுகிறது. காளையில் இந்நோயிருப்பின் கறவை மாட்டிற்கு பரவுகிறது.
இது மட்டுமல்லாமல், மாடு ஒன்றோடு ஒன்று நெருங்கி இருப்பதாலும் இந்நோய் பரவுகிறது. தண்ணீர், தீவனம், காற்று மூலமாகவும் பரவுகிறது. உறை விந்து மூலமாக அதிக அளவு பரவுவதற்கு வாய்ப்புள்ளது.
நோய் அறிகுறிகள்
** திடீரென்று 3-7 மாத சினைக் காலத்தில் கருச்சிதைவு ஏற்படும்.
** கண் மற்றும் நாசித்துவாரம் வழியாக நீர் போன்ற திரவம் வழியும். அதில் இந்நோய்க்கிருமிகள் அதிக அளவு இருக்கும்.
** கன்று இறந்து பிறக்கும். நஞ்சுக் கொடி தங்கிவிடும்.
** இத்துடன் மூச்சுத் திணறல், மடிநோய், மூளை பாதிக்கப்பட்டு வலிப்பு, உணவுக் குழல் பாதிக்கப்பட்டு வயிற்றுப் போக்கு போன்ற நோய் அறிகுறிகளும் தென்படும்.
தடுப்பும் பாதுகாப்பும்
** நோய் வராமல் இருக்க கறவைமாடுகளுக்கு தடுப்பூசி போடவேண்டும்.
** இரத்தப் பரிசோதனை செய்து, நோயுள்ள பொலிகாளைகளையும், கறவை மாடுகளையும் பண்ணையில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்.
** பாதிக்கப்பட்ட மாடுகளில் நோய்க் கிருமி தங்கி, அவ்வப்போது வெளியேறி நோயைப் பரப்புவதால் இத்தகைய மாடுகளைப் பண்ணையில் இருந்து வெளியேற்ற வேண்டும்.
** சுற்றுப்புறச் சுகாதாரம் பராமரிப்பு மேம்பாடு போன்றவற்றில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும்.
2. மாட்டு பித்த நோய் (அ) பிஎஸ்சி
இது ‘பொவைன் ஸ்பாஞ்சியோஸ்பெர்ம் என்செப்பலோ பதி’ (பிஎஸ்இ) அல்லது ‘மாட்டு பித்த நோய்’ எனப்படும். இது மூளையைப் பாதித்து நரம்பு மண்டலத்தையும் பாதிக்கிறது. இது மனிதனின் நரம்பியலோடு தொடர்புடைய சிஜேடி எனும் நோயைப் போன்றதாகும்.
இந்த உயிர்க்கொல்லி நோய்க்கு, இதுவரை ஏதும் மருந்து அறியப்படவில்லை. இந்நோய் பாதித்த பின்பு அதன் அறிகுறிகள் தெரிவதற்கு 2-8 வருடங்கள் ஆகலாம். நடுக்கம், அசாதாரணத் தோற்றம், பழக்கம் மற்றும் வளர்ச்சியற்ற நிலை போன்றவை இதன் அறிகுறிகள்.
இது முதலில் ரேபீஸ் நோய் போன்ற தோன்றலாம். இந்நோய் பாதித்த கால்நடைகளை அழிப்பதே நல்லது. இறந்த கால்நடைகளின் மூளை செல்களை மைக்ரோஸ்கோப் மூலம் பார்த்து மட்டுமே இந்நோயை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். உயிருடன் உள்ள கால்நடையில் பரிசோதனை செய்ய இயலாது.
3.. பிவிடி
இது பொவைன் வைரஸ் ‘டையேரியா நோய்’ எனப்படுகிறது. இந்நோய் செரிமானத்தையும், நோய் எதிர்ப்புப் பகுதி, நிமோனியா கருச்சிதைவு, கன்றுக் கோளாறு போன்ற பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது.
பிறந்த கன்றுகளில் இந்த நோயின் தாக்கமானது மூக்குச் சீரம் வெளிவருதல், வயிற்றுப் போக்கு மற்றும் சரியாக நடக்க முடியாத தன்மை போன்ற அறிகுறிகளால் அறியப்படுகிறது.
சரியான வைரஸ் தடுப்பூசி இழப்பைத் தவிர்க்க உதவுகிறது. எம்எல்வி - பிவிடி தடுப்பூசியை கால்நடை மருத்துவர் ஆலோசனைப்படி கொடுத்தல் நலம்.
4.. கன்றுக் கழிச்சல் நோய்
இந்நோய், இளங்கன்றுகளைத் தாக்கி அதிக அளவு உயிர்ச்சேதத்தை ஏற்படுத்துகிறது. இந்நோய் கோலிபார்ம் என்ற கிருமியால் ஏற்படுகிறது. குடற்பகுதியிலுள்ள மற்ற பாக்டீரியா நுண்கிருமிக்ள இவற்றுடன் சேர்ந்த பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
கன்று ஈன்ற ஓரிரு வாரங்களில் இந்நோயின் பாதிப்பு அதிகமாகக் காணப்படும். சீம்பால் கொடுக்கப்பட வில்லையெனில் கன்ற கழிச்சல் அதிகமாக ஏற்படும். அசுத்தமான தண்ணீர், மோசமான சுற்றுப்புறச் சுகாதாரம், அதிக அளவு பால் கொடுத்தல் போன்ற காரணங்களால் இந்நோய் ஏற்படுகிறது.
நோய் அறிகுறிகள்
** வெள்ளை நிறத்தில் வயிற்றுப் போக்கு தொடர்ந்து இருக்கும்.
** கன்றுகள் மெலிந்து காணப்படும்.
** நோய்க் கண்ட ஒரு வாரத்தில் கன்று இறந்துவிடும்.
தடுப்பும் பாதுகாப்பும்
** கன்று பிறந்தவுடன் மடியை நன்கு கழுவி சுத்தம் செய்த பிறகு சீம்பால் அருந்த விடவேண்டும். அடிக்கடி கொஞ்சம் கொஞ்சமாக அருந்த அனுமதிக்கவேண்டும்.
** உடல் எடையில் 10 சதம் பசும்பால் கொடுக்கவேண்டும். இதில் 10 விழுக்காடு சீம்பாலாகத் தரலாம்.
** தண்ணீர் மற்றும் திவனத் தொட்டி மிகவும் சுத்தமாக இருக்கவேண்டும்.
** தரை எப்போதும் உலர்ந்த நிலையில் இருக்கவேண்டும்.
** முதல் இரண்டு வாரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, ஆற வைத்துக் கொடுப்பது நல்லது. இல்லையேல் குளோரின் கலந்த தண்ணீரைக் கொடுக்க வேண்டும்.
** நோயுற்ற கன்றுகளுக்கு உடனே சிகிச்சை அளிக்கவேண்டும்.