வாழையில் தோன்றும் இலைப் புழுவை இப்படியும் கட்டுப்படுத்தலாம்…

 |  First Published Feb 14, 2017, 11:53 AM IST



வாழையில் இலைப் புழுவைக் கட்டுப்படுத்துவது இந்த ஆலோசனைகள் உங்களுக்கு உதவும்.

திருநெல்வேலி மாவட்டத்தின் தாமிரவருணி வடிகால் பாசனப் பகுதியான அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி மற்றும் பாளை வட்டாரப் பகுதிகளில் வாழை அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது.

Latest Videos

undefined

வாழையை பல்வேறு வகையான பூச்சிகள் தாக்கினாலும், தற்போது இலைப் புழுவானது பொருளாதார சேதத்தை ஏற்படுத்துகின்றன.

இப்புழுவானது வாழை நடவு செய்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் வாழை இலையைத் தாக்கத் தொடங்கும். இளம் புழுக்களானது இலையின் அடிப் பகுதி, மேல் பகுதி மற்றும் குருத்துப் பகுதிகளில் கூட்டம் கூட்டமாக இருந்து கொண்டு இலைகளில் உள்ள பச்சையத்தை சுரண்டி உண்ணும்.

இதனால், வாழையின் வளர்ச்சி பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்ட இலைகள் காய்ந்து தீய்ந்தது போலக் காணப்படும்.

மேலும், இப்புழுவானது வெளிவராத குருத்துக்களைத் தாக்கியிருந்தால் இலைகள் விரிவடைந்த பின்பு இலைகளில் வரிசையாக ஓட்டைகள் தென்படும். இவ்வாறு பாதிக்கப்பட்ட இலைகளை சந்தைகளில் விற்பனை செய்ய இயலாது.

தாய் அந்துப் பூச்சியின் பழுப்புநிற முன்னிறக்கையில் அலை வடிவ வெண்ணிறக் கோடுகள் காணப்படும். வெண்ணிற பின்னிறக்கையின் ஓரங்கள் கருப்பு நிறமாகக் காணப்படும். இவை இலையின் அடிப்பாகத்தில் முட்டைக் குவியல்களை இட்டு, அதை ஒருவித உரோமத்தினால் மூடிவிடும்.

முட்டையில் இருந்து ஐந்து நாள்களில் வெளிவரும் புழுவானது வெளிர் பச்சை நிறத்தில் பழுப்பு நிறக் கோடுகளுடன் காணப்படும். இப் புழுக்களானது 12 நாள்களில் பழுப்பு நிற கூட்டுப் புழுவாக மாறி மண்ணிற்குள் சென்றுவிடும். பின்னர் அவற்றிலிருந்து ஐந்து நாள்களில் அந்துப்பூச்சியாக வெளியே வரும்.

கட்டுப்படுத்தும் முறைகள்:

இலைகளின் அடிப்பாகத்தில் உள்ள முட்டைக் குவியல் அல்லது புழுக்களைக் கண்டறிந்து, அதற்கேற்ப புழுக்களைச் சேகரித்தோ அல்லது புழுக்கள் உள்ள இலையை சேர்த்து அறுத்தோ அழித்துவிட வேண்டும்.

இவ்வாறு செய்வதினால் ஆரம்ப நிலையிலேயே இப் புழுக்களைக் கட்டுப்படுத்திவிடலாம். ஒரு ஏக்கருக்கு இனக்கவர்ச்சிப் பொறி ஐந்து என்ற அளவில் வைத்து ஆண் அந்துப்பூச்சியைக் கவர்ந்து அழிப்பதன் மூலம் இப்பூச்சியின் எண்ணிக்கையைக் குறைக்கலாம்.

இப்புழுவின் தாக்குதல் அதிகமாக இருக்கும்போது குளோர்பைரிபாஸ் 2.5 மில்லி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருடன் கலந்து அதனுடன் ஒட்டும் திரவம் ஒரு மிலி என்ற அளவில் கலந்து இலையின் அடிப்பகுதி மற்றும் மேல் பகுதியில் நன்று நனையுமாறு தெளித்து இப் புழுவைக் கட்டுப்படுத்தலாம்.

click me!