கால்நடை தீவனத்தில் வைட்டமின் மற்றும் தாது உப்புக்கள் அவசியம். ஏன்?

 |  First Published Feb 13, 2017, 2:10 PM IST



கால்நடை தீவனத்தில் மாவுச்சத்து, புரதச்சத்து மற்றும் கொழுப்புச்சத்து இவை மூன்றும் இருப்பது போலவே வைட்டமின் மற்றும் தாது உப்புக்களும் ஒரு குறிப்பிட்ட அளவில் இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது. வைட்டமின் மற்றும் தாது உப்புக்கள் குறைவதினால் சில முக்கியமான நோய்கள் உண்டாகிறது. மேலும் இவை புரதம், கொழுப்பு மற்றும் மாவுப் பொருளின் ஆக்க சிதைவிற்கு முக்கிய பங்கு வகிக்கின்றன.

கால்சியம், பாஸ்பரஸ் இவை இரண்டும் சற்று அதிகளவில் தேவைப்படும் தாது உப்புக்கள் ஆகும். இவை எலும்பு மற்றும் பற்கள் வளர்ச்சிக்கு உதவுகின்றன. வளரும் கன்றுகள், பால்தரும் பசுக்கள் இவற்றின் கால்சியம், பாஸ்பரஸ் இரண்டின் தேவையும் மிக அவசியம். கால்சியம் சத்துக்குறைவால் பால்சுரம் என்னும் நோயும், பாஸ்பரஸ் சத்துக்குறைவால் மரம், காகிதம் போன்றவற்றை உண்ணக்கூடிய “பைகா’ என்னும்நோயும் கால்நடைகளில் உண்டாகின்றன.

Tap to resize

Latest Videos

சோடியம், பொட்டாசியம் போன்ற தாது உப்புக்கள் ரத்த அழுத்தம் பராமரிப்பு மற்றும் நரம்புகள் நல்ல முறையில் இயங்கவும் உதவுகின்றன. இந்த தாது உப்பு குறைவதினால் பசியின்மை, குறைந்த வளர்ச்சி மற்றும் பால் உற்பத்தி போன்றவை ஏற்படலாம். மெக்னீசியம் சத்து குறைவதால் டெட்டனஸ் என்னும் நரம்பு சம்பந்தப்பட்ட நோய் உண்டாகலாம்.

தாமிரம், கோபால்ட் மற்றும் இரும்பு சத்துக்கள் உடலின் பல முக்கிய இயக்கங்களுக்கும் அவசியமாகிறது. இவைசக்தி அல்லது எரிபொருளாகவும் உடலுறுப்பு வளர்ச்சி மற்றும் இனப் பெருக்கம் ஆகியவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. கோபால்ட், வைட்டமின் பி-12 உற்பத்திக்கு அவசியமாகிறது. தாமிரம் மற்றும் இரும்புச்சத்து குறைவதால் ரத்தசோகை மற்றும் இனப்பெருக்க குறைபாடுகள் தோன்ற காரணமாகிறது.

மாங்கனீஸ், வளர்ச்சி மற்றும் இனப்பெருக்கத்திற்கு உதவுகிறது. துத்தநாகம் தோல் மற்றும் உரோம வளர்ச்சிக்கும், இனப்பெருக்கத்திற்கும் உதவுகிறது. செலினியம் எரிபொருளாக்கத்திற்கு உதவுவதோடு, வைட்டமின் ஈ சத்துடன் சேர்ந்து திசு வளர்ச்சிக்கும் உதவுகிறது.

கிராமங்களில் தாராளமாக கிடைக்கக்கூடிய அகத்திக்கீரை, சூபாபுல், கல்யாண முருங்கை போன்றவைகளில் தாது உப்புக்கள் நிறைந்துள்ளன. இத்தகைய பசுந்தீவன மரங்களையோ அல்லது ஸ்டைலோ, சென்ட்ரோ, சிராட்ரோ, காரமணி போன்ற தாவரங்களையோ வளர்த்து அதன் பசுந்தழைகளை தீவனமாக பயன்படுத்துவதால் கால்நடைகளில் தாது உப்புக்கள் மற்றும் வைட்டமின்களால் ஏற்படும் குறைபாடு நோய்களை தவிர்க்கலாம். 

click me!