இயற்கை முறையில் பாக்கு சாகுபடி
ஒவ்வொரு பகுதியிலும் அமைந்துள்ள மண் வளம், நீர்வளம், தட்பவெப்ப நிலை… ஆகியவற்றிற்கு ஏற்ற வகையில்தான் அந்தந்தப் பகுதிகளில் விவசாயம் அமையும்.இதில், ஊடுபயிர்களும் விதிவிலகல்ல.
undefined
அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கேற்ற பயிர்களில் ஒன்று பாக்கு. இம்மாவட்டத்தில் பலரும், தனிப்பயிராகவும். தென்னைக்கு இடையில் ஊடுபயிராகவும் பாக்கு சாகுபடி செய்து நல்ல வருமானம் ஈட்டி வருகிறார்கள்.
பாக்கு சாகுபடி தொழில்நுட்பம்
மணல் கலந்த அனைத்து மண் வகையும்…. பாக்கு சாகுபடிக்கு ஏற்றவை. ஜாவா, நாடன் ஆகிய இரண்டு ரகங்கள்தான் பெரும்பாலும் இங்கே நடவு செய்யப்படுகின்றன. ஜாவா ரகம் 20 ஆண்டுகளும், நாடன் 50 ஆண்டுகளும் பலன் கொடுக்கின்றன. தரமான நாற்றுகளை உற்பத்தி செய்துதான் நடவு செய்ய வேண்டும்.
சித்திரை மாதம் தான் நடவுக்கு ஏற்ற மாதம். அதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே நாற்றுத் தயாரிப்பில் இறங்க வேண்டும். நாற்றங்காலுக்காக, பத்து அடி நீளம், பத்து அடி அகலத்தில் பாத்தி அமைத்துக் கொள்ள வேண்டும்.
பழுத்து அழுகாத நிலையில் உள்ள 500 தரமான பாக்குகளை மண்ணில் லேசாகப் புதைத்திருக்குமாறு செங்குத்தாக நட்டுவைத்து, காய்ந்தத் தென்னை ஓலைகளால் மூடி, தினமும் தண்ணீர் தெளித்து வர வேண்டும்.
கிட்டத்தட்ட 60 நாட்களில் முளைத்து வரும் செடி, காகத்தின் அலகு போல் இருக்கும். இதை, ‘காக்கா மூக்குப் பருவம்’ என்பார்கள். கிட்டத்தட்ட 450 செடிகளுக்குக் குறையாமல் இப்படி முளைத்து வரும். இதுதான் நடவுக்கேற்ற பருவம்.
நடவு செய்யப்பட வேண்டிய நிலத்தில் எட்டு அடி இடைவெளியில், ஒரு கன அடி அளவுக்குக் குழிபறித்து, மையத்தில் நாற்றை வைத்து மண்ணால் மூடி, ஒரு கையளவு தொழுவுரத்தை இட்டு, தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ஈரம் காயாத அளவுக்குப் பாசனம் செய்ய வேண்டும்.
நடவு செய்த நாளிலிருந்து ஒரு மாத இடைவெளியில் தொடர்ந்து ஒவ்வொரு செடிக்கும் கையளவு தொழுவுரம் இட்டு வரவேண்டும். இரண்டு வயது ஆன பிறகு மாதத்திற்கு மூன்று கிலோ அளவிற்கு தொழுவுரம் இட வேண்டும்.
ஓரளவு செடி வளர்ந்த பிறகு, வாழை போன்ற ஊடுபயிர்களை சாகுபடி செய்யலாம். வளர்ச்சிக்குத் தகுந்த அளவு ஒவ்வோர் ஆண்டும் தேவையான அளவு உரங்களைக் கொடுத்து வர வேண்டும். ஊடுபயிராக இருக்கும் பட்சத்தில் பிரதான பயிருக்கு இடும் உரமே போதுமானதாக இருக்கும்.
4-ஆம் வருட தொடக்கத்தில் பாக்கு காய்க்க ஆரம்பிக்கும். பெரும்பாலும் நோய்கள், பூச்சிகள் தாக்குவதில்லை.