சூழ்நிலை மண்டலத்தில் மண் என்பது ஒரு முக்கிய உயிரற்ற காரணியாகும். மண்ணிலுள்ள கனிம உப்புகளும் கரிமப் பொருள்களும் சூழ் மண்டலத்தின் தயாரிப்பாளர்களான தாவர வளர்ச்சிக்கும் பெரிதும் அவசியம்.
மேலும் மண் சூழ் இயலில் பல்வேறு பாக்டீரியா, பூஞ்சாணங்கள், புரோட்டாசோவாக்கள் ஆகியன சிதைப்பனவாகவும் மாற்றுவனவாகவும் உள்ளன. மொத்தத்தில் மண் ஒரு இயற்கைப் பரிசுப் பொருளாகும்.
மண்ணின் வளத்தை உயர்த்துவதற்கு அல்லது திரும்பப் பெறுவதற்குப் பின்வருவனவற்றைக் கையாளலாம்.
1.. பசுந்தாள் உரமிடுதல், பயிறுவகை தாவரங்களைப் பயிரிடுதல், இயற்கை உரங்களை அதிகமாக இடுதல், மல்ச் இடுதல் (மண்ணின் ஈரத் தன்மையைக் காப்பதற்காக அதன்மேல் விரிக்கப்படும் போர்வை போன்ற ஒரு விரிப்புக்கு மல்ச் என்று பெயர்.
2.. செயற்கை வேதி உரங்களால் நிலத்திற்கு அதிகமாகப் பாதிப்புகள் உண்டு. அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவதைக் குறைத்துக்கொள்ளவேண்டும். சர்க்கரை ஆலைக்கழிவு ‘பிரஸ்மட்’ உபயோகிக்கலாம்.
3.. பாரம்பரிய வேளாண் முறைப்படி இடைப் பயிரிடுதல், பல்வகைப் பயிர்களை விளைவித்தல் ஆகியன நிலத்தின் தரத்தை உயர்த்துவதுடன், வளிமண்டல நைட்ரஜனை நிலத்தில் நிலைநிறுத்த உதவும்.
4.. மேய்ச்சல் நிலத்தில் முறையற்ற மேய்ச்சலை தடுக்க வேண்டும்.
5.. உயிரி உரங்களை, மண்புழு உரங்களை பயன்படுத்த ஊக்கப்படுத்த வேண்டும்.
6.. பொதுவாக உரங்களையும் உயிரிச் சத்துக்களையும் தேவைப்பட்டால் மட்டுமே பயன்படுத்தவேண்டும்.
7.. சரியான இடைவெளிவிட்டு மண் ஆய்வு செய்து தரத்தைத் தெரிந்துகொள்ளவேண்டும்.
8.. ஜிப்சம் மற்றும் சுண்ணாம்பினை இட்டு களர் அமில நிலங்களை முறையே சீர்திருத்தலாம்.