ஆடு வளர்ப்பு
வான்கோழி, காடை, ஈமு என வகை வகையாக இறைச்சிகள் இருந்தாலும், நாட்டுக்கோழிக் கறிக்கும் வெள்ளாட்டுக் கறிக்கும் உள்ள மவுசு குறைவதேயில்லை. எப்போதுமே சந்தையில் அவற்றுக்கான கிராக்கி உச்சத்தில்தான்.
undefined
அவற்றின் விலையே இதற்கு சாட்சி. அதனால்தான் விவசாயத்தோடு சேர்த்து, ஆடு, கோழி என வளர்க்கும் பழக்கம் தொன்று தொட்டே தொடர்கிறது.
ஆரம்ப காலங்களில் நாட்டு ஆடுகள், நாட்டுக் கோழிகள் என்று இருந்ததெல்லாம் காலமாற்றத்திற்கு ஏற்ப கலப்பினங்களாக உருவெடுத்துவிட்டன. இத்தகைய கலப்பினங்கள் இருவகைகளில் உருவாக்கப்படுகின்றன.
ஆராய்ச்சிக் கூடங்களில் வெளிநாட்டு இனங்களோடு உள்நாட்டு இனங்களைக் கலப்பு செய்து வளர்ச்சி ஊக்கிகளை செலுத்தி அதிக இறைச்சி, கொழுப்புடன் கூடிய ஆடு, கோழி ரகங்களை உருவாக்குவது ஒரு விதம். இதற்கென சில கட்டுப்பாடுகள் உண்டு. பலவித சோதனைகளுக்குப் பிறகே இவை சந்தைப் பயன்பாட்டுக்கு வரும். இவற்றுக்குத் தனியாக பெயர்கூட வைப்பார்கள்.
அடுத்து… விவசாயிகளே நாட்டின் வேறு பகுதிகளை, மாநிலங்களைச் சேர்ந்த நாட்டு இனங்களை வாங்கி இயற்கையான முறையில் கலப்பு செய்து, புதிய ரகங்களை உருவாக்கிக் கொள்வது இன்னொரு விதம். இதற்குக் கட்டுப்பாடுகள் கிடையாது. மரபணு சோதனைகளோ, வேறு பிரச்சனைகளோ கிடையாது.
கால்நடை வளர்ப்பில் ஆர்வமுள்ள பலரும் பெருபாலும் இரண்டாவதான சிக்கலில்லாத இயற்கை முறையையே அதிகம் கடைப்பிடிக்கிறார்கள். குறிப்பாக தலைச்சேரி, ஜமுனாபாரி, சிரோஹி போன்ற வெளி மாநில ஆடுகளோடு நம் மாநில வெள்ளாடுகளைக் கலப்பு செய்து அதன் மூலம் நல்ல தரமான ஆடுகளை உற்பத்தி செய்து லாபம் பார்க்கலாம்.