தென்னை மரங்களில் பாளை பூ வெடித்து, சூல் முடியில் ஒட்டிய மகரந்தப்பொடி சூல் பைக்குள் சென்று கருசேர்க்கை ஆனதில் இருந்து 12 வது மாதம் நல்ல நெத்து விதை தேங்காய் கிடைக்கும். இது முளைத்துவர மூன்று மாதங்கள் ஆகும்.
அடுத்த மூன்று இலை வந்த பிறகு தான் நடவுக்கேற்ற தென்னம் பிள்ளையாக மாறுகிறது. ஆக ஒரு தென்னம்பிள்ளையாக உருபெற 18 மாதங்கள் ஆகின்றன.
தென்னம்பிள்ளைகளில் முளை தோன்றியதில் இருந்து 3 மாதங்களுக்குள் 2 அல்லது 3 இலைகள் வந்துவிடும். இத்தகைய தென்னம்பிள்ளைகள் நடவுக்கு சிறந்தோடு மட்டுமின்றி 99 சதவீதம் சேதம் இன்றி பிழைத்துவிடும்.
இவ்வாறு உள்ள தென்னம்பிள்ளைகளை தான் தேர்ந்தெடுக்கவேண்டும்.
தாவரங்களில் ஒரு விதையில்லை. இரு விதையிலை என 2 வகைகள் உள்ளன. இதில் தென்னை ஒரு விதையிலை தாவரத்தை சேர்ந்தது ஆகும்.
விதைகள் இருக்கும் முளைக்குருத்து முளைத்து வளர்ந்து, இயற்கையாக பூமியில் கலந்திருக்கும் அங்கக உணவை கிரகிக்கும் பருவம் வரும் வரை தாவரங்கள் தனது கன்றுகளுக்கு தேவையான சத்துக்களை விதைக்குள் சேர்த்து வைத்துள்ளது.
விதை முளைத்து வேர்கள் பூமியில் பதிந்து, பூமியில் உள்ள சத்துக்களை கிரகிக்க அதன் இனங்களை பொறுத்து குறிப்பிட்ட காலம் ஆகிறது. அந்தக் காலம் வரை தனது சந்ததிகளுக்கு விதை இலையில் உள்ள சத்துக்கள் பயன்படுகிறது.
விதை இலையில் உள்ள சத்துக்கள் முழுவதும் தீர்ந்து விதையிலைகள் மக்கி போவதற்குள் நாற்றுகளை எடுத்து நலம் நினைக்கிற இடத்தில் நடுவதால் அந்த நாற்று தாமதமின்றி புதுவேர் விட்டு பிழைத்து விடும்.
தென்னம்பிளைகலை அதிக காலம் நாற்றங்காலிலே வைத்திருப்பதால் விதையிலைகள் சத்துக்களை இழந்துவிடுகின்றன. 2 அல்லது 3 வருடம் நாற்றங்காலில் வைத்திருந்த பிள்ளைகளை நடும் போது, புது வேர்கள் வளர சக்தியின்றி பிள்ளைகள் காய்ந்து விடுகின்றன.
ஓரிரு தென்னம்பிள்ளைகள் பிழைப்பது கூட வயது குறைந்த சிறியவைகளாக தான் இருக்கும். இதிலிருந்து 3 முதல் 4 மாதம் வரையுள்ள தென்னம்பிள்ளைகள் தான் நடவுக்கு சிறந்தது என்பது தெரிய வருகிறது.