மூலிகைப் பூச்சி விரட்டி...
உழவர்கள் காலங்காலமாக கடைப்பிடித்து வந்த இயற்கை வழி சாகுபடி முறை பூச்சிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. எல்லாப் பூச்சிகளுமே பயிர்களின் விரோதிகள் அல்ல.
பூச்சிகளை உண்ணும் தட்டான், பொறிவண்டு, மூக்கு வண்டு, சிலந்தி, கண்ணாடி சிறகி போன்றவைகள் இருக்கவே செய்கின்றன.
பசுமைப் புரட்சியின் சாதனையாக, மிகவும் விஷத் தன்மை கொண்ட ரசாயன பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்தி பூச்சிகளைக் கொல்லத் தொடங்கியதும், உணவுப் பண்டங்கள் அனைத்தும் நஞ்சானது மட்டுமின்றி, நன்மை செய்யும் பூச்சிகளும் அழிந்து உயரின பன்மைய சுழலில் சமன்பாடு பாதிக்கப்பட்டு தீமை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரித்ததோடு, அவற்றின் வீரியமும் பன் மடங்கு அதிகரித்தது.
இதற்கு மாற்றாக பயிர்களில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த மூலிகைப் பூச்சி விரட்டிகளை தயாரித்து பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளனர். மூலிகைப் பூச்சி விரட்டியின் நோக்கம், பூச்சிகளை கொல்வது அல்ல, பூச்சிகளை விரட்டுவதே ஆகும்.
மூலிகைப் பூச்சி விரட்டி தயாரிக்கும் முறை...
மூலிகைப் பூச்சி விரட்டிகள் மூன்று வகையான இலைகளைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. ஒன்று, தொட்டால் வாசனையடிக்கக்கூடிய செடிகள், இரண்டு, தின்றால் கசக்கக்கூடிய செடிகள், மூன்று, ஒடித்தால் பால் வரக்கூடிய செடிகள் ஆகியவற்றில் ஐந்து முதல் அதற்கு மேற்பட்ட செடிகளை எடுத்துக்கொண்டு, உரலில் போட்டு இடிக்க வேண்டு.
பின், ஒரு மண் பானை, பிளாஸ்டிக் டிரம்மில் போட்டு, இலைகள் மூழ்கும் அளவிற்கு மாட்டுக் கோமியம், தண்ணீர் சேர்க்க வேண்டும். மேலே குறிப்பிட்ட கலவையை 15 நாள்கள் வரை நன்றாக மூடி வைக்கட வேண்டும்.
தயாரித்த 15 நாளில், ஒரு லிட்டர் பூச்சி விரட்டியுடன் 10 லிட்டர் தண்ணீர் கலந்து பயிர் மீது தெளிக்க வேண்டும். பயிரிட்ட 15-ஆம் நாளிலிருந்து (15 நாளுக்கு ஒரு முறை) பூ பூக்கும் வரை தெளிக்கலாம்.