பருத்தி சாகுபடியில் அதிக மகசூல் பெற இந்த ஆலோசனையை கேளுங்கள்...

 |  First Published May 26, 2018, 1:58 PM IST
Ask this advice to get a high yield on cotton cultivation ...



பருத்தி சாகுபடி...

** பிப்ரவரி, மார்ச் மாதங்கள் கோடைக்கால இறவைப் பருத்தி சாகுபடிக்கு ஏற்ற மாதங்கள். 

Tap to resize

Latest Videos

undefined

** எம்.சி.யூ-5 (விடி), எஸ்.வி.பி.ஆர்-2, 4, சுரபி ஆகிய ரகங்கள் ஏற்றவை. 

** பஞ்சு நீக்காத விதையை ஏக்கருக்கு 6 கிலோ, பஞ்சு நீக்கிய விதையை ஏக்கருக்கு 3 கிலோ பயன்படுத்தலாம்.

** பஞ்சு நீக்காத விதைகளை அமில விதை நேர்த்தி செய்ய வேண்டும். ஒரு பிளாஸ்டிக் பக்கெட்டில் ஒரு கிலோ பஞ்சு நீக்காத விதைகளை எடுத்து அதில் 100 மி.லி. அடர் கந்தக அமிலத்தை ஊற்றி, மரக் குச்சியால் கலக்க வேண்டும்.

** விதைகள் காபிக் கொட்டை நிறம்வரும் வரை கலக்க வேண்டும். பின்னர் வேறு பக்கெட்டில் நீர் நிரப்பி, இந்த விதைகளை அதில் நன்கு கழுவி, நிழலில் உலர்த்தி விதைக்கலாம்.

** விதை மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த விதைத்த 24 மணி நேரத்துக்கு முன்பு ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பென்டாசிம் மருந்து கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். 

** 1 பொட்டலம் அசோஸ்பைரில்லம் (இதர) மற்றும் 1 பொட்டலம் பாஸ்போபாக்டீரியா ஆகிய உயிர் உரங்களை ஆறிய ஆடையில்லா அரிசிக் கஞ்சியில் கரைத்து, பூஞ்சாண விதை நேர்த்தி செய்து நிழலில் 15 நிமிடம் உலர வைத்து விதைக்க வேண்டும். அல்லது திரவ அசோஸ்பைரில்லம் (இதர) 50 மி.லி. மற்றும் பாஸ்போபாக்டீரியா 50 மி.லி. ஆகியன கலந்து விதைநேர்த்தி செய்து நிழலில் உலர வைத்து, விதைக்க வேண்டும்.

** நிலத்தை நன்றாக உழுது பண்படுத்த வேண்டும், மண் நன்கு பொடியாகும்வரை உழுத பின்னர் ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் பிண்ணாக்கு இடுவதன் மூலம் கூன்வண்டு தாக்குதலைத் தவிர்க்கலாம்.

** ஏக்கருக்கு 5 டன் தொழு உரம் அல்லது 1 டன் மண்புழு உரத்தை மண்ணின் மீது பரப்பி உழ வேண்டும். 4 பொட்டலம் அசோஸ்பைரில்லம் (இதர) மற்றும் 4 பொட்டலம் பாஸ்போபாக்டீரியா ஆகிய உயிர் உரங்களை தொழு உரத்துடன் கலந்து இட வேண்டும். 


** அல்லது திரவ அசோஸ்பைரில்லம் (இதர) 200 மி.லி. மற்றும் திரவ பாஸ்போபாக்டீரியா 200 மி.லி. ஆகியவற்றை நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து வயலில் சீராக தூவவேண்டும். ஏக்கருக்கு 5 கிலோ பருத்தி நுண்ணுரம் கலவையை 20 கிலோ மணலுடன் கலந்து விதைக்கும் முன் சீராக இட வேண்டும்.

** ரகங்களுக்கு ஏற்ற இடைவெளியில் பார் அமைத்து, உரமிட்ட பகுதிக்கு சற்று மேலே 3 செ.மீ. ஆழத்தில் கீழ்க்காணும் இடைவெளியில் விதைகளை 75-30 என்ற செ.மீ அளவில் (குழிக்கு 2 விதை), வீரிய ஒட்டு ரகங்களை 12-60 செ.மீ என்ற அளவில் (குழிக்கு ஒரு விதை) என்ற வகையில் ஊன்ற வேண்டும்.

** விதைத்த 40-45 ஆம் நாள் 35 கிலோ யூரியா, 14 கிலோ பொட்டாஷும் மேலுரமாக இட வேண்டும். வீரிய ஒட்டு ரகங்களுக்கு முதல் மேலுரமாக விதைத்த 45ஆம் நாளில் 35 கிலோ யூரியா, 14 கிலோ பொட்டாஷும், மேலுரமாக விதைத்த 60ஆம் நாளில் 35 கிலோ யூரியா, 14 கிலோ பொட்டாஷ் இட வேண்டும்.

** விதைத்த 45ஆம் நாளில் பார் எடுத்து செடிகளுக்கு மண் அணைக்க வேண்டும். ரகங்களுக்கு 75-80ஆம் நாள் 15ஆவது கணுவிலும், வீரிய ஒட்டு ரகங்களுக்கு 85-90ஆம் நாளில் 20ஆவது கணுவிலும் தண்டின் நுனியை சுமார் 10 செ.மீ. அளவுக்கு கிள்ளிவிட வேண்டும். 

** நாப்தலின் அசிட்டிக் அமிலம் 40 பிபிஎம் கரைசலை (40 மிலி என்ஏஏஐ 1 லிட்டர் நீரில் கரைக்க வேண்டும்) மொட்டு விடும் பருவத்தில் தெளிக்க வேண்டும். 2 சத டி.ஏ.பி. கரைசலை 45, 75ஆம் நாளில் இலை வழியாக தெளிக்க வேண்டும்.

** விதைத்த உடன் நீர் பாய்ச்ச வேண்டும். விதைத்த 3ஆம் நாளில் உயிர் தண்ணீர் கட்ட வேண்டும். விதைத்த 10-15ஆம் நாள் இடைவெளி நிரப்பும் நேரத்தில் ஒருமுறை நீர் கட்ட வேண்டும். 20 நாள் கழித்து 15-20ஆம் நாள்களுக்கு ஒருமுறை தண்ணீர் கட்ட வேண்டும். பூச்சிநோய் தாக்குதல் அறிந்து அதற்கேற்ப உரிய பயிர் பாதுகாப்பு முறைகளை பின்பற்ற வேண்டும்.

** பருத்திக் காய்களில் மேலிருந்து கீழாக லேசாக கீறல் தோன்றி, பின்பு சுமார் 2-3 நாளில் முழுவதும் நன்றாக மலர்ந்து வெடித்த பின்தான் பருத்தி எடுக்க வேண்டும். 120ஆம் நாள் தொடங்கி வாரம் ஒருமுறை அல்லது 10 நாளுக்கு ஒருமுறை என 4 முறை பருத்தி எடுக்கலாம்.
 

click me!