வெள்ளாடுகளில் பால் கறக்கும்போது...
** பால் கறக்கும் பெட்டை ஆடுகளைக் கிடாக்களின் அருகே விடாமல் தனியே பராமரிக்க வேண்டும். ஒரு நாளைக்கு 2 முறை கறக்கலாம். காம்புகள் காயம் படுமாறு அழுத்தாமல் கவனமாகக் கறக்க வேண்டும்.
** கறப்பதற்கு முன், மடி, காம்புகளை நன்கு கழுவி உலர வைக்க வேண்டும். காம்பின் எல்லா இடங்களிலும் அழுத்தம் சீராகப் பரவுமாறு, கறக்கும் போது கை விரல்களை நன்கு மடித்துக் கறக்க வேண்டும். பால் வருவது சிறிதளவாகக் குறையும் வரை கறக்கலாம்.
** நல்ல தரமுள்ள பசும்புல், அடர் தீவனங்களை சரியான சமயத்தில் அளித்து வருதல் நல்ல சினை ஆடுகளைத் தயார் செய்ய உதவும்.
** ஆட்டின் வாயில் ஏதேனும் காயமோ, வலியோ இருக்கும்போது தடுப்பு மருந்து அளிக்கக் கூடாது. பண்ணையில் உள்ள கால்நடைகளில் ஏதேனும் ஒன்றுக்கு வாயில் ஏதேனும் வலி இருந்தால் தடுப்பூசி (அ) தடுப்பு மருந்து அளிக்கும்போது வலி அதிகரிக்கும். இவ்வாறு வாய் பிரச்சனை உள்ள ஆடுகளைக் கவனித்து 3 வாரங்களுக்குப் பின் தடுப்பு மருந்து அளிக்கலாம்.
** கால் நகங்களை வெட்டும்போது நன்கு கவனித்து தேவையின்றி வளர்ந்த நகங்களை மட்டுமே நறுக்க வேண்டும். அதிகமாக வெட்டினாலும் காலில் வலி ஏற்படும். வெட்டாமல் விட்டாலும் கீழே, காலை உரசும் போது புண் (அ) ஏதேனும் கிருமித் தொற்று ஏற்படும். நோய் பரவும் வாய்ப்பும் உள்ளது.
** சினை ஆடுகளைத் தனியே வைத்துப் பராமரிக்க வேண்டும். அதன் குட்டி ஈனும் காலத்தை தோராயமாகக் கணித்து, அதற்கேற்றவாறு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
** பொதுவாக குட்டி ஈனும் தருணத்தில் ரத்தம் விஷமாதல், கருக்கலைதல் (அ) குட்டி இறந்து பிறத்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். இவற்றைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் நலம்.