சினை மற்றும் குட்டி ஆடுகளில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு நடவடிக்கைகள் இதோ...

First Published May 25, 2018, 2:43 PM IST
Highlights
Here are the caretakers that need to be done in the ozone and baby goats ...


சினை ஆடுகள் பராமரிப்பு...

சினை ஆடுகளை மந்தையிலிருந்து பிரித்துத் தனியே பராமரித்தல் வேண்டும். சினை ஆடுகள் ஒன்றை ஒன்று முட்டிக் கொள்ள அனுமதிக்கக் கூடாது. சினையுற்றபின் கரு கலைந்த ஆடுகளுடன் சினை ஆடுகள் எக்காரணம் கொண்டும் கலந்து விடுதல் கூடாது.
குட்டி ஈனுவதற்கு முன்பு ஆட்டின் பின்பாகத்தில் மடியைச் சுற்றிலும் உள்ள முடியையும் வாலையும் வெட்டி விடுதல் நல்லது. அடுத்த குட்டி ஈனுவதற்கு 6-8 வாரங்கள் முன்பே பால் கறப்பதை நிறுத்தி விட வேண்டும்.

பிறந்த குட்டிகளின் பராமரிப்பு...

குட்டி பிறந்தவுடன் பஞ்சு அல்லது பழைய துணி கொண்டு குட்டியின் வாயையும் மூக்கையும் நன்கு துடைக்க வேண்டும். குட்டி மூச்சுவிட எளிதாகுமாறு வாயைச் சுற்றியுள்ள திரவத்தை அகற்ற வேண்டும். பின்னங்கால்களையும் பிடித்து தலைகீழாக இருக்குமாறு குட்டியை சில நொடிகள் பிடித்திருக்கலாம்.

இது மூச்சுக் குழல் பாதையை சுத்தம் செய்ய உதவும். குட்டி பிறந்த அரை மணி நேரத்துக்குள் தானாகவே எழுந்து தாயிடம் பால் குடிக்க வேண்டும். இல்லாவிடில் அது எழுந்து நடக்க உதவி செய்தல் வேண்டும்.

தாய், தனது குட்டியை நாக்கினால் தடவி விட அனுமதிக்க வேண்டும். முதல் அரை மணி நேரத்துக்குள் குட்டியை சீம்பால் குடிக்க வைக்க வேண்டும். குட்டி தானாக குடிக்க முடியாவிட்டால் காம்பை எடுத்து வாயில் வைத்துப் பாலை பீய்ச்சி விடுதல் நலம்.

புதிதாகப் பிறந்த குட்டிகளைத் தனியே வைத்துப் பராமரிக்க வேண்டும். தொப்புள் கொடியை சிறிது நேரம் விட்டு நறுக்கிப் பின் உடனே அயோடின் டிஞ்சர் போன்ற தொற்று நீக்கிகளைத் தடவி விட வேண்டும்.

முதல் இரண்டு மாதங்கள் எந்த ஒரு பாதிப்புமின்றி குட்டிகளைக் கவனமாகப் பாதுகாத்தல் வேண்டும். முதல் இரண்டு வாரங்களில் கொம்பு நீக்கம் செய்தல் அவசியம்.

சரியான தடுப்பூசிகளைத் தவறாமல் தகுந்த நேரத்தில் போடுதல் வேண்டும். 8 வார காலத்தில் தாயிடமிருந்து குட்டியைப் பிரித்துத் தனியே வளர்க்கப் பழக்க வேண்டும். குட்டிகளைத் தனியே தரம் பிரித்து அதன் எடைக்கேற்ப சரியான தீவனமளித்தல் அவசியம்.


 

click me!