சூடோமோனாஸ் புளூரசன்ஸ், டிரைகோடெர்மா விரிடி போன்ற நுண்ணுயிரிகளை பயன்படுத்தி பயிர் நோய்களை கட்டுப்படுத்தலாம்.
மண்வழி பரவும் நாற்று அழுகல், வேர் அழுகல் மற்றும் வாடல் நோய்களை சூடோமோனாஸ் புளூரசன்ஸ் கட்டுப்படுத்துகிறது.
விதையின் மேற்புறம், வேர், வேர்அடிமண் போன்ற பாகங்களில் நுண்ணுயிரிகள் வளர்ந்து பயிர்களில் வளர்ச்சியை தூண்டுவதன் மூலம் நோய்களை கட்டுப்படுத்துகிறது. இதனால் பயிர்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் வீதம் சூடோமோனாஸ் கலந்து விதைநேர்த்தி செய்யலாம். நடவுக்கு முன் நாற்றங்காலில் இருந்து பிடுங்கிய நாற்றுக்களின் வேர்களை, சூடோமோனாஸ் கரைசலில் ஒரு மணி நேரம் ஊறவைத்து நடவேண்டும்.
நடவு முடித்து 30 நாட்கள் கழித்து, எக்டேருக்கு இரண்டரை கிலோ சூடோமோனாஸ் வீதம், 50 கிலோ சாண எரு அல்லது மண்புழு உரம் அல்லது மணலுடன் கலந்து வயலில் தூவ வேண்டும்.
உணவு மற்றும் வாழிடத்திற்கு நோய்க் காரணிகளுடன் போட்டியிடுவதன் மூலம், டிரைகோடெர்மா விரிடி நுண்ணுயிரி யானது, பயிர்களின் நோயை கட்டுப்படுத்துகிறது. நொதிகள் மற்றும் எதிர்உயிர்க் காரணிகளை சுரந்து, நோய் காரணிகளை அழிக்கிறது.
பயறு, எண்ணெய் வித்துக்கள், காய்கறி, மலர், பழப்பயிர்களில் நோயை கட்டுப்படுத்த ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் என்ற அளவில் கலந்து விதைநேர்த்தி செய்ய வேண்டும்.