வெண்டை பயிருக்கு மோர் தெளிக்கனும்
வெண்டை பயிருக்கு முக்கிய எதிரியாக இருப்பது வெள்ளை ஈ என்னும் சாறு உறிஞ்சும் பூச்சியாகும். இந்த பூச்சியானது தேமல் நோயை பரப்புகிறது. வெண்டை நோயில் வெள்ளை ஈயை கட்டுப்படுத்துவது முக்கியமானது. இதற்கு, 10 லிட்டர் மோரை 2 நாட்களுக்கு புளிக்க வைக்க வேண்டும்.
undefined
பின்பு 1 லிட்டர் மோருக்கு 9 லிட்டர் தண்ணீர் வீதம் தெளிப்பானில் நிரப்பி வெண்டை நடவு செய்து 25 நாட்களுக்கு பிறகு கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும். இவ்வாறு மோர் கரைசலை தெளிப்பதால் தேமல் நோயை பரப்பும் வெள்ளை ஈக்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன.
இந்த முறையில் வெள்ளை பூச்சியை கட்டுப்படுத்த ஏக்கருக்கு 100 ரூபாய் தான் செலவு ஆகும்.
பருத்தியில் காய்ப்புழு கட்டுப்பாடு
பருத்தி சாகுபடியில் காய்ப்புழுக்களால் மிகவும் மகசூல் பாதிப்பு ஏற்படுகிறது. தற்போது காய்ப்புழுக்களை கட்டுப்படுத்த விவசாயிகள் பல்வேறு பூச்சி மருந்துகளை பயன்படுத்துகின்றனர். ஆனால் இயற்¬கான பாரம்பரிய முறையில் காய்ப்புழுக்களை விரட்ட முடியும். இதற்கு, 15 லிட்டர் தயிரை 15 லிட்டர் தண்ணீருடன் நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
பின்பு 5 கிலோ அளவு வேப்பிலைகளை சேகரித்து தண்ணீர் விட்டு இடித்து சாறு பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும். வேப்பிலை சாற்றை தயிர் கரைசலுடன் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இந்த கலவையை 15 நாட்கள் வரை ஊற வைத்தல் வேண்டும். தினந்தோறும் இந்த கலவையை மரக்குச்சியினால் காலை அல்லது மாலை வேளையில் கலக்கி விட வேண்டும்.
15 நாட்களுக்கு பின் இந்த கரைசலை வடித்து, தெளிந்த கரைசலை எடுத்து பருத்தி செடிகளில் நன்றாக படும்படி தெளிக்க வேண்டும். தயிர் மற்றும் வேப்பிலை சாறு கலவையை தெளிப்பதால் பருத்தியில் 60 சதம் காய்ப்புழுக்கள் கட்டுப்படுத்தப்படும்.
இந்த தொழில் நுட்பத்தை பின்பற்ற ஒரு ஏக்கர் பருத்தி சாகுபடி பரப்பிற்கு அதிகபட்சம் ரூ.200 மட்டுமே செலவாகும்.