“மண்புழு உரமே” இயற்கை விவசாயத்தின் அடித்தளம்…

 |  First Published Oct 19, 2016, 2:56 AM IST



பழங்காலத்தில் விவசாயமானது இயற்கை உரங்களை மட்டும் பயன்படுத்தி செய்யப்பட்டு வந்தது.
இதனால், நிறைவான உற்பத்தி அடைந்ததோடு மண்ணின் வளமும் பாதுகாக்கப்பட்டது.
ஆனால் இன்றைய சூழலில் பெருகி வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப பசுமைப்புரட்சியின் காரணமாக அதிக விளைச்சல் தரக் கூடியதும், இரசாயன உரங்களால் கூடுதல் பயன் தரக் கூடியதுமான ரகங்கள் உருவாக்கப்பட்டன.

இரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகளின் அதிகமான பயன்பாட்டினால் மண்ணின் வளம் குறைந்ததோடு மண்ணில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையும் குறையத் தொடங்கியது.
எனவே இத்தகைய தரம் குறைந்த வளமற்ற நிலங்களை வளமான நிலங்களாக மாற்றுவதில் இயற்கை உரங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. மண்புழு உயிர் உரமானது இயற்கை உரங்களில் மிக முக்கியமான ஒன்றாகும். இயற்கையில் கிடைக்கக் கூடிய கழிவுகளை உணவாக உட்கொண்டு குடலில் உள்ள நுண்ணுயிர், நொதிகளால் மண் புழுக்கள் மூலம் செரிக்கப்பட்டு சிறு சிறு உருண்டைகளாக மலப்புழை வழியாக வெளித்தள்ளப்படும் கட்டிகளே மண்புழு உரம் எனப்படுகிறது.

Tap to resize

Latest Videos

மண்புழு உரத்தின் பயன்கள்:

நிலத்தின் அங்ககப் பொருள்களின் அளவு, நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை அதிகமாகிறது. மண்ணின் நீர்ப் பிடிப்பு சக்தி, காற்றோட்டம், வடிகால் வசதியை அதிகரிக்கிறது. தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து, நுண்ணுட்டச் சத்துக்களின் பயன்பாட்டை அதிகரிக்கிறது.
பயிரின் வளர்ச்சிக்குத் தேவையான வளர்ச்சி ஊக்கிகளான சைட்டோகைனயீன், ஆக்ஸின், பலவகை நொதிகள் உள்ளன.

மற்ற மட்கும் உரங்களை விட மண்புழு உரத்தில் சத்துகள் அதிகம். இது வேர்களின் வளர்ச்சியை அதிகரிக்கிறது.

செழிப்பான பயிர் வளர்ச்சி, அதிக மகசூல் எடுக்க வழி வகை செய்யும். கழிவுகளைப் பயன்படுத்தி மண்புழு உரம் தயாரிப்பதால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது.
மண் புழு உரம் தயாரிப்பதைத் தொழிலாக மேற்கொள்வதால் வருமானம், வேலைவாய்ப்பும் கிடைக்கிறது.

தொட்டி முறையில் மண்புழு உர உற்பத்தி:

உற்பத்தி செய்யும் இடமானது நிழலுடன், அதிகளவு ஈரப்பதம், குளிர்ச்சியானப் பகுதியாக இருக்க வேண்டும். அதாவது உபயோகப்படுத்தாத மாட்டுத் தொழுவம், கோழிப் பண்ணை, தென்னைக் கீற்று கூரை உள்ள இடத்தைப் பயன்படுத்தலாம். தொட்டி கட்டமைப்பானது 6 அடி நீளமும், 3 அடி அகலமும், 3 அடி உயரமும் இருக்குமாறு தயார் செய்து கொள்ள வேண்டும். தொட்டியின் அடிபாகத்தில் 3 செ.மீ. உயரத்துக்கு தென்னை நார்க் கழிவு (அல்லது) கரும்பு சோகை (அல்லது) நெல் உமி போட வேண்டும்.
இந்தப் படுக்கையின் மேல் 2 செ.மீ. உயரத்துக்கு வயல் மண்ணைப் பரப்ப வேண்டும். பாதி மட்கிய பண்ணைக் கழிவுகளை (பயிர்க் கழிவு, தழைகள், காய்கறி கழிவு, வைக்கோல்) 50 சதவீதம் கால்நடைக் கழிவுடன் (மாட்டு எரு, ஆட்டு எரு, சாண எரிவாயுக் கழிவு) கலக்க வேண்டும்.

இக்கலவையை, தொட்டியில் 2 அடி உயரத்துக்குப் நிரப்ப வேண்டும். தொட்டியில் கழிவுகளின் மேற்பரப்பில் 2 கிலோ ஆப்ரிக்கன் மண்புழுவை விட வேண்டும்.
தினமும் 60 சதவீதம் ஈரப்பதம் இருக்குமாறு தண்ணீர் தெளிக்க வேண்டும். தொட்டியை தென்னை கீற்றுகள் மூலம் முடி வைக்கவும். 60 நாள்களுக்குள் மண்புழு உரம் தயாராகிவிடும். மண்புழு உர அறுவடையானது மண்புழு உர படுக்கையின் மேல் உள்ள மண்புழுக் கழிவுகளை மட்டும் அறுவடை செய்ய வேண்டும்.

ஒரு கிலோ மண் புழு உர உற்பத்திக்கு ஆகும் செலவு ரூ 1.50.
மண் புழு குளியல் நீர் உற்பத்தி செய்தல்: பெரிய மண்பானை (அ) பிளாஸ்டிக் பேரல்களைத் தேர்வு செய்ய வேண்டும்.

பேரல்களின் அடிபாகத்தில் 10 செ.மீ. உயரத்தில் கூழாங்கற்கள், மணல் நிரப்ப வேண்டும். இதில் நன்றாக மட்கிய பண்ணைக் கழிவுகள், மாட்டு எருவை பேரல்களில் மேல் பகுதிவரை நிரப்ப வேண்டும்.
இதன் மேல் பகுதியில் 500 மண்புழுக்களை விட வேண்டும். பிறகு பேரல் மேல் பகுதியில் ஒரு வாளியை வைத்து தொடர்ந்து சொட்டு சொட்டாக தண்ணீர் விழுமாறு பார்த்துக் கொள்ளவும்.
தினமும் 4-5 லிட்டர் நீர் வாளியில் ஊற்றப்பட வேண்டும். 10 நாட்களுக்கு பிறகு தினமும் 3 -4 லிட்டர் வரை உற்பத்தி செய்யலாம்.

1 லிட்டர் மண்புழு குளியல் நீரை 10 லிட்டர் நீரில் கலந்து அனைத்து வேளாண், தோட்டக்கலைப் பயிர்களுக்கு வளர்ச்சி ஊக்கியாக தெளிக்கலாம், 1 லிட்டர் மண்புழு குளியல் நீரை 1 லிட்டர் மாட்டு கோமியத்துடன் கலந்து பூச்சி விரட்டியாக பயிர்களுக்கு தெளிக்கலாம்.
மண் புழுவை உற்பத்தி செய்தல்: மண் பானையில் சிறிய துளை இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.
இதில் ஒரு பங்கு காய்ந்த இலைகள், ஒரு பங்கு மட்கிய மாட்டுச் சாணம் (1:1) போட வேண்டும்.
10 கிலோ மட்கிய எருவுக்கு 50 புழுக்கள் வீதம் மண் பானையில் விட வேண்டும். இந்த மண் பானையை ஈரக்கோணிப்பைப் போட்டு மூடி வைக்க வேண்டும். நிழலான இடத்தில் மண்பானையை வைத்துப் பாதுகாக்க வேண்டும்.

50 - 60 சதவீதம் ஈரப்பதம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். 50 - 60 நாட்களில் 50 லிருந்து 250 மண்புழுக்களை பெருக்கலாம்.
மண்புழு உரத்திலுள்ள சத்துப் பொருள்களின் அளவு: மண்புழு உரத்தின் ஊட்டச்சத்து அளவு நாம் பயன்படுத்தும் கழிவுப் பொருள்களை பொருத்தே அமைகிறது.
பொதுவாக மண் புழு உரத்தில் 15-21 சதவீதம் அங்கக கார்பன், 0.5-2 சதவீதம் தழைச்சத்து, 0.1-0.5 சதவீதம் மணிச்சத்து, 0.5-1.5 சதவீதம் சாம்பல் சத்து உள்ளது.
மேலும் இரும்பு, துத்தநாகம், சோடியம், கால்சியம், மாங்கனீசு சத்துகளும் ஊட்டச்சத்து பி மற்றும் சைட்டோகைனின், ஆக்ஸின் போன்ற பயிர் ஊக்கிகளும் இருக்கின்றன.

 

click me!